இதன் பொருள் : உயிரிறு சொன்முன் உயிர்வரு வழியும் - உயிர் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின்முன் உயிர் முதலாகிய மொழிவரும் இடமும், உயிரிறு சொன்முன் மெய்வருவழியும் - உயிர் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் மெய்முதலாகிய மொழிவரும் இடமும், மெய்யிறு சொன்முன்உயிர் வரு வழியும் - மெய் தனக்கு ஈறாக இறுஞ்சொல்லின் முன்னர் உயிர் முதலாகிய மொழிவரும் இடமும், மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும் - மெய் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் மெய்முதலாகிய மொழிவரும் இடமும், என்று புணர்நிலைச்சுட்டு - என்று சொல்லப்பட்ட ஒன்றினோடொன்று கூடும் நிலைமையாகிய கருத்தின்கண், இவ்வென அறியக் கிளக்குங் காலை - அவற்றை இத்துணையென வரையறையை எல்லாரும் அறிய யாங் கூறுங்காலத்து, நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்று ஆயீரியல - முன்னர் நிறுத்தப்பட்ட சொல்லும் அதனை முடித்தலைக்குறித்து வருஞ்சொல்லும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு இயல்பினையுடைய என்றவாறு. |