116புணரியல்

நான்கு  இனத்தோடுங்  கூடப்   பதினாறாம்.   இடையும்   உரியுந்தாமாக
நில்லாமையிற் பெயர்வினையே கூறினார். இடைச்சொல்லும்  உரிச்சொல்லும்
புணர்க்குஞ் செய்கைப்பட்டுழிப் புணர்ப்புச்  சிறுபான்மை. 1பெயர்ப்பெயரும்
ஒட்டுப்பெயருமென  இரண்டுவகைப்படும்   பெயர்.   தெரிநிலைவினையுங்
குறிப்பு   வினையுமென   இரண்டுவகைப்படுந்  தொழில்.  நிலைமொழியது
ஈற்றெழுத்த    முன்னர்ப்    பிறந்து    கெட்டுப்போக    வருமொழியின்
முதலெழுத்துப் பின் பிறந்து  கெட்டமையின்  முறையே  பிறந்து  கெடுவன
ஒருங்கு  நின்று  புணருமா  றின்மையிற்  புணர்ச்சியென்பது  ஒன்றின்றாம்
பிறவெனின்,    அச்சொற்களைக்     கூறுகின்றோருங்   கேட்கின்றோரும்
அவ்வோசையை  இடையறவுபடாமை உள்ளத்தின்கண்ணே உணர்வராதலின்
அவ்வோசை கேடின்றி உள்ளத்தின்கண்  நிலைபெற்றுப் புணர்ந்தனவேயாம்.
ஆகவே    பின்னர்க்     2கண்கூடாகப்     புணர்கின்ற    புணர்ச்சியும்
முடிந்தனவேயாமென்று உணர்க. இனி முயற்கோடு  உண்டென்றால்   அது
குறித்துவரு   கிளவி     யன்மையிற்     புணர்க்கப்படாது.    3இதுதான்
இன்றென்றாற் புணர்க்கப்படுமென்று உணர்க.
 

(6)
 

109.

அவைதாம்
மெய்பிறி தாதன் மிகுதல் குன்றலென்
றிவ்வென மொழிப திரியு மாறே.
 

இது முற்கூறிய மூன்று திரிபும் ஆமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : அவைதாந்   திரியுமாறு - முன்னர்த்    திரிபென்று
கூறிய அவைதாந் திரிந்து   புணரும்   நெறியை,  மெய்பிறிதாதல் மிகுதல்
குன்றலென்று   இவ்வென   மொழிப - மெய்     வேறுபடுதல்   மிகுதல்
குன்றலென்று   கூறப்படும்  இம்மூன்று   கூற்றையுடையவென்று   கூறுவர்
ஆசிரியர் என்றவாறு.


1. பெயர்ப்பெயர் - பெயர்ச்சொல்லால்  வந்த  பெயர்.  ஒட்டுப்பெயர் -
வினையாலணையும் பெயர்.
 

2. கண்கூடாக என்றது, வரிவடிவை நோக்கி.
 

3. இது  என்றது   முயற்கோட்டை.  முயற்கோடு    இன்று   என்றாற்
புணர்க்கப்படும் என்னை ? பொருளியைதலின்.