இம்மூன்றும் அல்லாதது இயல்பாமென்று உணர்க. இவை 1விகற்பிக்கப் பதினாறு உதாரணமாம். மட்குடம் மலைத்தலை மரவேர் இவை பெயரோடு புணர்ந்த மூன்று திரிபு. மண்மலை என்பது இயல்பு. சொற்கேட்டான் பலாக்குறைத்தான் மரநட்டான் இவை பெயரோடு தொழில் புணர்ந்த மூன்று திரிபு. கொற்றன் வந்தான் இஃது இயல்பு. வந்தானாற் சாத்தான் கொடாப்பொருள் ஓடுநாகம் இவை தொழிலொடு பெயர் புணர்ந்த மூன்றுதிரிபு. கொற்றன் வந்தான் இஃது இயல்பு. வந்தாற்கொள்ளும் பாடப்போயினான் சாஞான்றான் இவை தொழிலொடு தொழில் புணர்ந்த மூன்று திரிபு. வந்தான் கொண்டான் இஃது இயல்பு. மூன்று திரிபென்னாது இடனென்றதனான் ஒரு புணர்ச்சிக்கண் மூன்றும் ஒருங்கேயும் வரப்பெறுமென்று உணர்க. மகத்தாற் கொண்டான் இஃது அங்ஙனம் வந்தவாறு மகர ஈற்று 'நாட்பெயர்க் கிளவி' (எழு - 331) என்னுஞ் சூத்திரத்தான் உணர்க. இரண்டு வருவனவுங் காண்க.
(7)
110.
நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியு மடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய.
இது நிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடையடுத்தும் அவ்விரு மொழியும் அடையடுத்தும் புணருமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இதன் பொருள்: நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும் - நிலைமொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக் குறித்துவருஞ் சொல்லும். அடையொடு தோன்றினும் புணர்நிலைக்கு உரிய - தாமே புணராது ஒரோவோர்சொல் அடையடுத்துவரினும் இரண்டும் அடையடுத்துவரினும் புணர்நிலைமைக்கு உரிய என்றவாறு.