பெயரியலுள் அவன் இவன் உவன் என்பது முதலாக உயர்திணைப்பெயரும் அது இது உது என்பது முதலாக அஃறிணைப்பெயரும் ஆமாறு அவற்றிற்கு இலக்கணங் கூறுகின்றார் ஈண்டுக் குறியிட்டாளுதல் மாத்திரையே கூறினாரென்று உணர்க. இனிக் கொற்றன் கொற்றி என்றாற்போலும் விரவுப் பெயருங் கொற்றன்குறியன் கொற்றிகுறியள் கொற்றன் குளம்பு கொற்றிகுறிது எனப் பின்வருவனவற்றாற் றிணை தெரிதலின் இருதிணைப் பெயரின்கண் அடங்கும். 1கொற்றன்செவி கொற்றிசெவி என்பனவும் பின்னர் வருகின்ற வினைகளாற் திணைவிளங்கி அடங்குமாறு உணர்க. இனி 'அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே' (எழு - 155) என்றாற்போலப் பிறாண்டும் ஓதுதல்பற்றி நிலையென்றதனான் விரவுப்பெயர் கோடலும் ஒன்று. |
(15) |
118. | அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே. |
|
இது சாரியை வருமிடங் கூறுகின்றது. |
இதன் பொருள் : அவற்றுவழி மருங்கின் - அச் சொல்லப்பட்ட இருவகைப் பெயர்களின் பின்னாகிய இடத்தே, சாரியை வரும் - சாரியைச் சொற்கள் வரும் என்றவாறு. |
உதாரணம்: ஆடூஉவின்கை மகடூஉவின்கை பலவற்றுக் கோடு எனப் 2புணரியனிலையிடைப் பொருணிலைக்கு உதவி வந்தன. சாரியை யென்றதன் பொருள், வேறாகி நின்ற இருமொழியுந் தம்மிற் சார்தற்பொருட்டு இயைந்து நின்றது என்றவாறு. |
(16) |
|
1. கொற்றன் செவிநல்லன் என்புழி உயர்திணையென்பதும் கொற்றன் செவிநீண்டது என்புழி அஃறிணை என்பதும் விளங்கும். |
2. புணரியனிலையிடைப் பொருணிலைக் குதவிவந்தன என்பது, அவற்றுட் "புணரிய னிலையிடைப் பொருணிலைக் குதநவும்" என்னும் (சொல் - 250) சூத்திரக் கருத்தை நோக்கி நின்றது. பெயர்கூறி "அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே" எனவே முன்பெயர்வழி வேற்றுமை வருமென்றாரேனும் சாரியை வருங்கால் சாரியைக்குப் பின்னேயே வேற்றுமையுருபு வருமென்பது இச் சூத்திரத்து "அவற்றுவழி" என்பதனாற் பெறப்பட்டது. |