119. | அவைதாம் இன்னே வற்றே யத்தே யம்மே யொன்ன யானே யக்கே யிக்கே யன்னென் கிளவி யுளப்படப் பிறவு மன்ன வென்ப சாரியை மொழியே. |
|
இஃது அச்சாரியைகட்குப் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது. |
இதன் பொருள்: அவைதாம் - முன்னர்ச் சாரியையெனப்பட்ட அவைதாம், இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன்னென்கிளவி உளப்பட அன்ன என்ப - இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன்னென்னுஞ் சொல்லோடு கூட ஒன்பதாகிய அத்தன்மையுடையனவும், பிறவுஞ் சாரியை மொழி என்ப - அவை யொழிந்தனவுஞ் சாரியைச் சொல்லாமென்பர் ஆசிரியர் என்றவாறு. |
பிறவாவன தம் நம் நும் உம் ஞான்று கெழு ஏ ஐ என்பனவாம். இவற்றுள் ஞான்று ஒழிந்தன எடுத்தோதுவர் ஆசிரியர். 'எடுத்தநறவின் 1குலையங்காந்தள்' இது வினைத்தொகை ; சாரியையன்று. இன்சாரியை வழக்குப்பயிற்சியும் பலகால் எடுத்தோதப்படுதலும் 2பொதுவகையான் ஓதிய வழித் தானே சேறலுமாகிய சிறப்புநோக்கி முன்வைத்தார். வற்றும் அத்தும் இன்போல முதல் திரியுமாகலானுஞ் செய்கை யொப்புமையானும் அதன்பின் வைத்தார். அம் ஈறுதிரியுமாதலின் திரிபுபற்றி அதன் பின் வைத்தார். ஒன் ஈறு திரியுமேனும் வழக்குப்பயிற்சியின்றி நான்காமுருபின்கண் திரிதலின் அதன்பின் வைத்தார். ஆன் பொருட்புணர்ச்சிக்கும் உருபுபுணர்ச்சிக்கும் வருமென்று அதன்பின் வைத்தார். |
|
1. குலையலங்காந்தள் என்புழி அலங்குகாந்தள் என்பது அலங்காந்தள் என நின்றதாதலின் அம்சாரியை யென்று கொள்ளற்க என்பது கருத்து. |
2. பொதுவகையானோதிய வழித்தானே சேறல் என்றது, இச் சொல் இச்சாரியை பெறுமென விதியாது பொதுவாகச் சாரியைப்பேறு கூறியவிடத்து தானே சாரியையாகச் செல்லுதல். |