உதாரணம்: விளவிற்கு கோஒற்கு ஒருபாற்கு அதற்கு என வரும். |
இதனை 'அளவாகு மொழிமுதல்' (எழு - 121) என்பதன்பின் வையாது ஈண்டு வைத்தது னகர ஈறுகளெல்லாம் உடன் திரியுமென்றற்கு. ஆண்டு வைப்பின் இன்சாரியையே திரியுமென்பது படும். 'ஒன்றுமுத லாகப் பத்தூர்ந்து வரூஉ - மெல்லா வெண்ணும்' (எழு - 199) என்பதனான் ஒருபாற்கு என்பதனை முடிக்க. |
(21) |
124. | ஆனி னகரமு மதனோ ரற்றே நாண்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே. |
|
இஃது ஆனின் ஈறு பொருட்புணர்ச்சிக்கண் திரியுமென்கின்றது. |
இதன் பொருள்: நாள்முன் வரூஉம் வன்முதற்தொழிற்கு - நாட்பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாகஉடைய தொழிற்சொற்கு இடையேவரும், ஆனின் னகரமும் அதனோரற்று - ஆன்சாரியையின் னகரமும் நான்கனுருபின்கண் வரும் ஆன் சாரியைபோல றகரமாய்த் திரியும் என்றவாறு. |
உதாரணம்: பரணியாற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவரும். 'நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக்கு' (எழு - 247) என்றனான் ஆன்சாரியை கொடுத்துச் செய்கை செய்க. இனி உம்மையை இறந்தது தழீஇய தாக்கி நாளல்லவற்றுமுன் வரும் வன்முதற்றொழிற்கண் இன்னின் னகரமும் அதனோடு ஒக்குமெனப் பொருளுரைத்துப் பனியிற்கொண்டான் வளியிற்கொண்டான் என இன்னின் னகரமும் றகரமாதல் கொள்க. |
இனி, 1ஞாபகத்தால் தொழிற்கண் இன்னின் னகரந் திரியுமெனவே பெயர்க்கண் இன்னின் னகரந் திரிதலுந் திரியாமையுங் கொள்க. குறும்பிற்கொற்றன் பறம்பிற்பாரி எனத் திரிந்து வந்தன. குருகின்கால் எருத்தின்புறம் எனத் திரியாதுவந்தன. |
(22) |
|
1. ஞாபகம் கூறல் என்னும் உத்தியாவது, சூத்திரஞ் செய்யுங்காற் சில்வகை எழுத்தினாலாகியதாகவும் பொருணனி விளங்கவுஞ் செய்யாது, அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து அதனானே வேறு பல பொருளுணர்த்தல் ஞாபகத்தாற் கொள்க என ஒட்டுக. |