புணரியல்141

138.

1புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலாது
மெய்யொடுஞ் சிவணு மவ்வியல் கெடுத்தே.

 

இது   புள்ளியீற்றுமுன்   உயிர்முதன்மொழி  வந்த காலத்துப் புணரும்
முறைமை கூறுகின்றது.
 

இதன் பொருள்: புள்ளியீற்றுமுன்   உயிர்     தனித்து   இயலாது -
புள்ளியீற்றுச்   சொன்முன்னர்    வந்த     உயிர்   முதன்   மொழியின்
உயிர் தனித்து நடவாது,   மெய்யொடுஞ்   சிவணும் - அப் புள்ளியோடும்
கூடும்,   அவ்வியல்   கெடுத்து - தான்   தனித்துநின்ற அவ்வியல்பினைக்
கெடுத்து என்றவாறு.
 

எனவே, நீரோடு   கூடிய பால்போல நின்றதென்று ஒற்றுமை கூறினார்.
ஈண்டு இதனானே உயிர்மெய்யெனப் பெயர் பெற்றது. 


1. இச்சூத்திரத்து   "அவ்வியல்கெடுத்து"   என்பதற்குத்  தான் தனித்து
நிற்குமியல்பினைக்   கெடுத்து   என்று  பொருள்கொள்ளாது,  புள்ளியீறாக
நிற்கு மவ்வியல்பினைக்கெடுத்து என்று மெய்க்கும், குற்றியலுகர வீறாகநிற்கு
மவ்வியல்பினைக்  கெடுத்து   என்று   குற்றியலுகர   வீற்றிற்கு   மேற்பப்
பொருள்கொள்ளின்,  நன்னூலார்   குற்றியலுகரங்  கெட்டுப்  புணருமெனக்
கூறியது   தொல்காப்பியர்க்குங்  கருத்தாகும்.  கெட்டுப்  புணருமென்பதே
தொல்காப்பியர்க்குங் கருத்தாதல் "யகரம் வரும்வழி இகரங் குறுகு - முகரக்
கிளவி  துவரத்  தோன்றாது"  என்னுஞ்    சூத்திரத்தை   உற்றுநோக்கின்
அறியப்படும். இனி, "புள்ளி  யீற்றின்முன்  னுயிர்தனித் தியலாது" என்புழி,
ஈற்றும் என  உம்மையை  விரித்துக்  குற்றியலுகர வீற்றிற்கு வலிந்து விதி
கொள்வதினும்   "புள்ளியீறு"     என்பதை    இருமுறை    ஓதி   இரு
தொடராகக்கொண்டு   மெய்யீறு   என்றும்,   புள்ளிபெறுங்   குற்றியலுகர
வீறென்றும்   பொருள்   கொள்ளலாமென்பது   எமது கருத்து. அங்ஙனம்
கொள்ளின், "குற்றிய லுகரமு மற்றென   மொழிப"   என ஆசிரியர் ஓதிய
விதிக்குமோர்   பயனுண்டாம்.  இடையில்   "வேற்றுமைப்   பொருள்வயி
னுருபா குநவும்" என்பதையும்,  வேற்றுமையியலில்  ஐந்தாம்  வேற்றுமைச்
சூத்திரத்து  "இதனினிற்றிது"  என்பதையும்   இரு   தொடராக  வைத்துச்
சேனாவரையரும் பொருள் கூறல் காண்க. அன்றி ஒரு சூத்திரத்திற்கு  இரு
பொருளுங்  கொள்வர்.  அவ்வாறே  கோடலுமாம்.   இதுபோல்வனவற்றை
ஒப்பக்கூறல் என்பர் பேராசிரியர்.  உத்தி  பேராசிரியருரை  பார்க்க.  இச்
சூத்திரத்திற்கு யான் கூறிய  புதுக்  கருத்தை  அங்கீகரித்துத்  தாமெழுதிய
எழுத்ததிகாரக் குறிப்புரையில்,  டாக்டர் P. S. சுப்பிரமணிய சாஸ்திரிகளும்
இச்  சூத்திரத்துக்குக்   குறிப்புரை   எழுதியுள்ளார்.   அந்நூல்  நோக்கி
யறிக. (அந்நூல் திருப்பனந்தாள் மட வெளியீடு.)