புணரியல்143

இஃது   உயிரீறும்   உயிர்முதன்மொழியும்  புணரும்வழி  நிகழ்வதோர்
கருவி கூறுகின்றது.
 

இதன் பொருள்:     எல்லாமொழிக்கும்      -     நிலைமொழியும்
வருமொழியுமாய்ப்   புணரும்   எவ்வகை   மொழிக்கும்,  உயிர்வருவழி -
உயிர்  முதன்மொழி  வருமிடத்து,   உடம்படு  மெய்யின்   உருவுகொளல்
வரையார் - உடம்படுமெய்யினது   வடிவை   உயிரீறு   கோடலை நீக்கார்
கொள்வார் ஆசிரியர் என்றவாறு.
 

அவை யகரமும் வகரமுமென்பது முதனூல்பற்றிக்கோடும்;
 

'உடம்படு மெய்யே யகார வகார
முயிர்முதன் மொழிவரூஉங் காலை யான'

 

எனவும்,
 

'இறுதியு முதலு முயிர்நிலை வரினே
யுறுமென மொழிப வுடம்படு மெய்யே'

 

எனவுங்   கூறினாராகலின்.   உயிர்களுள்  இகர ஈகார  ஐகார  ஈறு யகர
உடம்படுமெய்  கொள்ளும்.  ஏகாரம்,  யகாரமும்,  வகாரமுங்  கொள்ளும்.
அல்லன வெல்லாம் வகர உடன்படுமெய்யே கொள்ளுமென்று உணர்க.
 

உதாரணம் : கிளியழகிது,    குரீஇயோப்புவாள்,   வரையர    மகளிர்
எனவும்; விளவழகிது, பலாவழகிது,  கடுவழகிது,   பூவழகிது,   கோவழகிது,
கௌவடைந்தது   எனவும்   ஒட்டுக.   'ஏஎ   யிவளொருத்தி   பேடியோ
வென்றார்' ஏவாடல்காண்க என ஏகாரத்திற்கு இரண்டும் வந்தன.
 

ஒன்றென   முடித்த  லென்பதனான்  1விகாரப்பட்ட  மொழிக்கண்ணும்
உடம்படுமெய்  கொள்க.   மரவடி.  ஆயிருதிணை  எனவரும்.   வரையா
ரென்றதனான்   உடம்படுமெய்   கோடல்    ஒருதலையன்று.  கிளிஅரிது
மூங்காஇல்லை   எனவும்   வரும்.    ஒன்றென     முடித்தலென்பதனால்
'விண்வத்துக்கொட்கும்' எனச் சிறுபான்மை புள்ளியீற்றினும் வரும். செல்வுழி
உண்புழி என்பன வினைத்தொகையென மறுக்க.
 

(38)

1. விகாரப்பட்டமொழி   என்றது,   விதியீற்றை.   செல்வுழி   உண்புழி
என்பவற்றை   வினைத்தொகையென   மறுக்கவென்று   இவர்   கூறலின்,
செல்லுழி,   உண்ணுழி     என்பன       பிரித்துப     புணர்க்கப்படாத
மரூஉமொழிகளாய்   முறையே    வகரமும்  பகரமும்  பெற்று   இவ்வாறு
நின்றனவென்பது கருத்துப்போலும்.