156தொகைமரபு

155.

அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே.
 

இது விரவுப்பெயருள் இயல்பாய் முடிவனவும் உளவென்கின்றது.
 

இதன் பொருள்: அஃறிணை     விரவுப்பெயர்   -   உயர்திணைப்
பெயரோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர், இயல்பு மாருள - இயல்பாய்
முடிவனவும் உள, உம்மையான் இயல்பின்றி முடிவனவும் உள என்றவாறு.
 

உயர்திணைப்பெயரோடு   அஃறிணைசென்று விரவிற்றென்ற தென்னை?
சொல்லதிகாரத்து   'இருதிணைச்   சொற்குமோ    ரன்ன   வுரிமையின்,
(சொல் - 172)   என்று   சூத்திரஞ்    செய்வாரா    லெனின்,   அதுவும்
பொருந்துமாறு   கூறுதும்.   சாத்தன் சாத்தி, முடவன் முடத்தி என வரும்
விரவுப்பெயர்க்கண்   உயர்திணைக்கு   உரித்தாக   ஓதிய   ஆண்பாலும்
பெண்பாலும் உணர்த்திநின்ற ஈற்றெழுத்துக்களே அஃறிணை   யாண்பாலும்
பெண்பாலும் உணர்த்திற்றென்றல் வேண்டும்;   என்னை?   அஃறிணைக்கு
ஒருமைப்பாலும்  பன்மைப்பாலும்    உணர்த்தும்   ஈறன்றி   ஆண்பாலும்
பெண்பாலும்   உணர்த்தும்   ஈறுகள்   உளவாக ஆசிரியர் ஓதாமையின் ;
அங்ஙனம் உயர்திணை இருபாலும் உணர்த்தும் ஈறுகள் நின்றே அஃறிணை
யாண்பாலையும்     பெண்பாலையும்       உணர்த்துதலின்   அஃறிணை
உயர்திணையோடு   சென்று    விரவிற்றென்று   அவற்றின்   உண்மைத்
தன்மைத்   தோற்றங்    கூறுவான்   ஈண்டுக்    கூறினார்.    இவ்வாறே
விளிமரபின்கட் 1'கிளந்த விறுதி  யஃறிணை  விரவுப்பெயர்'  (சொல் - 150)
என்புழியும்    ஆசிரியர்     உயர்திணையோடு     அஃறிணை  விரவிய
விரவுப்பெயரென   ஆண்டும்   உண்மைத்   தன்மைத் தோற்றங் கூறுவர்.
மாணாக்கன்   இனிது    உணர்தற்கு   இவ்வாறு    விரவுப்   பெயரினது
உண்மைத்தன்மைத்  தோற்றம்   இரண்டு   அதிகாரத்துங்   கூறி,   அவ்
விரவுப்பெயர்   வழக்கின்கண்   இரு  திணைப்பொருளும்  உணர்த்தி இரு
திணைச்சொல்லாய்   நிற்றற்கும்    ஒத்த   உரிமையவாமெனப்   புலப்பட
நிற்குமாறு காட்டினாரென்று உணர்க.


1. சேனாவரையர்க்கும் இதுவே கருத்தாதல் அச் சூத்திரவுரையானுணர்க.