இனி, அவை அல்வழிக்கண் இயல்பாய் நிற்குமாறு ;- சாத்தன் கொற்றன் சாத்தி கொற்றி என நிறுத்திக் குறியன் சிறியன் தீயன் பெரியன் குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும், ஞான்றான் நீண்டான் மாண்டான் யாவன் வலியன் ஞான்றாள் நீண்டாள் மாண்டாள் யாவள் வலியள் எனவும், அடைந்தான் ஒளவியத்தான் அடைந்தாள் ஒளவியத்தாள் எனவும் நான்கு கணத்தோடும் ஒட்டி உணர்க. இனி வேற்றுமைக்கட் கை செவி தலை புறம் எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஒளவியம் எனவும் ஒட்டுக. இவற்றுள் னகாரம் நிற்பத் தகார நகாரம் வந்துழித் திரியும் உதாரணம் ஈண்டுக் கொள்ளற்க. இனிச் சாத்தன்குறிது சாத்திகுறிது என அஃறிணை முடிபேற்பனவுங் கொள்க. இவற்றொடு வினைச்சொல் தலைப்பெய்ய இவை இருதிணைக்கும் உரியவாம். ஆண்டு நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவதனை ஈண்டுத் தொகுத்தார். இஃது உயர்திணைக்கும் ஒக்கும். உம்மையான் இயல்பின்றி முடிவன னகார ஈற்றுட் காட்டுதும். |