தொகைமரபு169

இதன் பொருள்: குறையென் கிளவி முன்வருகாலை - குறையென்னுஞ்
சொல் அளவுப்பெயர்  முதலியவற்றின்முன்  வருங்காலத்திற்கு,  வேற்றுமை
யியற்கை - வேற்றுமைப்  புணர்ச்சி  முடிபிற்கு  உரித்தாகக்  கூறுந்தன்மை,
நிறையத் தோன்றும் - நிரம்பத் தோன்றும் என்றவாறு.
 

உதாரணம் ; உரிக்குறை கலக்குறை எனவும், தொடிக்குறை கொட்குறை
எனவும்,   காணிக்குறை   காற்குறை   எனவும்    வரும்.  உரியநெல்லுங்
குறைநெல்லு மென்க.
 

வேற்றுமை யியற்கை யெனவே  இவை  வேற்றுமையன் றாயின. எனவே
உரிக்குறை யென்பதற்கு உரியும் உழக்கு மெனப் பொருளாயிற்று.  ஏனையும்
அன்ன.
 

முன்வருகாலை  யென்றதனானே  கலப்பயறு கலப்பாகு என்றாற்போலப்
பொருட்பெயரோடு   புணரும்வழியும்  இவ்வேற்றுமை  முடிபு  எய்துவிக்க.
1பாகென்றது  பாக்கினை.  நிறையவென்றதனானே  உரிக்கூறு  தொடிக்கூறு
காணிக்கூறு எனக் கூறென்றதற்கும் இம்முடிபு எய்துவிக்க.
 

(24)
 

167.

குற்றிய லுகரக் கின்னே சாரியை.
 

இது  வேற்றுமைமுடிபு  விலக்கி  இன்  வகுத்தலின் எய்தியது விலக்கிப்
பிறிதுவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள்: குற்றியலுகரக்குச்   சாரியை  -  குற்றியலுகர  ஈற்று
அளவுப்பெயர் முதலியவற்றிற்குக் குறையென்பதனோடு புணரும்வழி  வருஞ்
சாரியை, இன்னே - இன்சாரியையேயாம் என்றவாறு.
 

குற்றியலுகரக்கு, இதற்கு அத்து 2விதித்து முடிக்க.  குற்றயிலுகரத்தின்னே
யென்பதும் பாடம்.
 

உழக்கின்குறை  ஆழாக்கின்குறை எனவும், கழஞ்சின்குறை கஃசின்குறை
எனவும்,   ஒன்றின்குறை    பத்தின்குறை    எனவும்   வரும்.   இதற்கு
உழக்குங்குறையு   மென்பது   பொருள்.   இது  வேற்றுமைக்கண்ணாயின்
உழக்கிற்குறையென நிற்கும்.
 

(25)
 

168.

அத்திடை வரூஉங் கலமெ னளவே.
 

இதுவும்  எய்தியது  விலக்கிப்  பிறிதுவிதி  வகுத்தது,   வேற்றுமைவிதி
விலக்கி அத்து வகுத்தலின். 


1. பாகு  என்றது   பாக்கினை    என்றார்.   'குற்றபாகு கொழிப்பவர்'
என்பதுபோன்ற இலக்கிய வழக்கு நோக்கி.
 

2. விதித்து என்பது விரித்து என்றிருந்திருக்கவேண்டும்.