அன்சாரியையோடு பொருந்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரங்கெடும் - தான் பொருந்திய மெய்யை நிறுத்தி உகரங்கெடும் என்றவாறு. |
அதனை அதனொடு இதனை இதனொடு உதனை உதனொடு என வரும். 1அதினை அதினொடு என்றாற்போல்வன மரு முடிப்புழி முடிந்தன. ஒட்டிய என்றதனாற் சுட்டுமுதல் உகரமன்றிப் பிற உகரமும் உயிர்வருவழியிற் கெடுவன கொள்க. அவை கதவு களவு கனவு என நிறுத்தி அழகிது இல்லை என வருவித்து உகரங் கெடுத்து முடிக்க. இவற்றை வகர ஈறாக்கி உகரம் பெற்றனவென்று கோடுமெனின் வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் பயின்றுவரும் வகர ஈறுகளை ஒழித்து ஆசிரியர் 'வகரக் கிளவி நான்மொழி யீற்றது' (எழு - 81) என்றாற்போல வரைந்தோதல் குன்றக்கூறலாம் ஆதலின், அவை உகர ஈறென்று கொள்க. அவை செலவு வரவு தரவு உணவு கனவு என வழக்கின்கண்ணும் 'புன்கண் ணுடைத்தாற் புணர்வு' 'பாடறியாதானை யிரவு' 'கண்ணாரக் காணக் கதவு' எனச் செய்யுட்கண்ணும் பயின்றுவருமாறு உணர்க. |
(4) |
177. | சுட்டுமுத லாகிய வையெ னிறுதி வற்றொடு சிவணி நிற்றலு முரித்தே. |
|
இஃது ஐகார ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள்: சுட்டு முதலாகிய ஐயெனிறுதி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுச்சொல், வற்றொடு சிவணி நிற்றலும் உரித்து - வற்றுச்சாரியையோடு பொருந்தி நிற்றலும் உரித்து என்றவாறு. உம்மையான் வற்றொடு சில உருபின்கண் இன்சாரியைபெற்று நிற்றலும் உரித்தென்றவாறு. |
அவையற்றை அவையற்றொடு இவையற்றை இவையற்றொடு உவையற்றை உவையற்றொடு என ஒட்டுக ; இங்ஙனம் ஐகாரம் நிற்க வற்றுவந்துழி 'வஃகான் மெய்கெட' (எழு - 122) என்பதனான் முடிக்க. |
|
1. அதினை அதினொடு என்பன மருமுடிப்புழி முடிந்தன என்றது, 'வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்' என்னும் அதிகாரப் புறனடையான் முடிந்தமையை. இதனால் அதன் அதின் எனப் பிற்காலத்து மருவியதென்பது கருத்துப்போலும். |