இனி, உம்மையான் அவையற்றிற்கு அவையற்றின்கண் என நான்காவதும் ஏழாவதும் வற்றும் இன்னும் பெற்று வந்தவாறு காண்க. இனி, ஒன்றென முடித்தலென்பதனாற் பல்லவை நுதலிய அகர ஈற்றிற்கும் இவ்விரண்டு உருபின்கண் வற்றும் இன்னுங் கொடுத்துப் பலவற்றிற்கு பலவற்றின்கண் என முடிக்க. இது மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும். |
(5) |
178. | யாவென் வினாவி னையெ னிறுதியு மாயிய றிரியா தென்மனார் புலவ ராவயின் வகர மையொடுங் கெடுமே. |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: 1யாவென் வினாவின் ஐயென் இறுதியும் - யாவென்னும் வினாவினையுடைய ஐகார ஈற்றுச்சொல்லும், ஆயியல் திரியாது - முற்கூறிய சுட்டுமுதல் ஐகாரம்போலவற்றுப்பெறும் அவ்வியல்பில் திரியாதென்று சொல்லுவார் ஆசிரியர், ஆவயின் வகரம் ஐயொடுங் கெடும் - அவ் வீற்றிடத்து வகரம் ஐகாரத்தோடு கூடக்கெடும் என்றவாறு. |
யாவற்றை யாவற்றோடு என ஒட்டுக. வகரம் வற்றுமிசையொற்றென்று கெடுவதனைக் கேடு ஓதிய மிகையானே பிற ஐகாரமும் வற்றுப் பெறுதல் கொள்க. கரியவற்றை கரியவற்றொடு நெடியவற்றை நெடியவற்றொடு குறியவற்றை குறியவற்றொடு என எல்லாவற்றோடும் ஒட்டுக. இது கருமை நெடுமை குறுமை என்னும் பண்புப்பெயரன்றிக் கரியவை நெடியவை குறியவை எனப் பண்புகொள்பெயராய் நிற்றலின் வகர ஐகாரங் கெடுத்து வற்றுச்சாரியை கொடுத்து முடிக்கப்பட்டன. இவை 'ஐம்பா லறியும் பண்பு தொகுமொழி' அன்மை உணர்க. |
(6) |
179. | நீயெ னொருபெயர் நெடுமுதல் குறுகு மாவயி னகர மொற்றா கும்மே. |
|
இஃது ஈகார ஈறு இன்னவாறு புணருமென்கின்றது. |
இதன் பொருள்: நீ என் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் - நீயென்னும் ஒருபெயர் தன்மேல்நின்ற நெடிதாகிய ஈகாரங் |
|
1. யாவென் வினாவின் ஐயெனிறுதி யாவை என்பது. |