196. | நெட்டெழுத் திம்ப ரொற்றுமிகத் தோன்று மப்பான் மொழிக ளல்வழி யான. |
|
இஃது அக் குற்றிய லுகரங்களுட் சிலவற்றிக்கு இனவொற்று மிகுமென்கின்றது. |
இதன் பொருள் : நெட்டெழுத்திம்பர் ஒற்றுமிகத் தோன்றும் - நெட்டெழுத்தின்பின்னர் வருகின்ற குற்றுகரங்கட்கு இனவொற்று மிகத் தோன்றாநிற்கும், அப்பால் மொழிகள் அல்வழி ஆன - ஒற்று மிகத்தோன்றாத கசதபக்கள் ஈறாகிய மொழிகள் அல்லாத இடத்து என்றவாறு. |
எனவே, டகார றகாரங்கள் ஈறான சொல்லிடைத் தோன்றுமாயிற்று. |
உதாரணம் : யாட்டை யாட்டொடு யாட்டுக்கு யாட்டின் யாட்டது யாட்டுக்கண் எனவும், யாற்றை சோற்றை எனவும் இனவொற்று மிக்கன. இவை அப்பால்மொழிகள் அல்லன. |
நாகு காசு போது காபு என்றாற்போல்வன அப்பால் மொழிகள் : அவை இனவொற்று மிகாவாயின. |
(24) |
197. | அவைதாம் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. |
|
இஃது எய்தியது விலக்கிற்று. |
இதன் பொருள் :அவைதாம் இயற்கைய ஆகுஞ் செயற்கைய என்ப - அங்ஙனம் இனவொற்று மிகுவனதாம் இன்சாரியை பெறாது இயல்பாக முடியுஞ் செய்தியையுடைய வென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
உதாரணம் :முன்னர்க் காட்டினவே கொள்க. |
செயற்கைய என்ற மிகையானே உயிர்த்தொடர்மொழிகளில் ஏற்பனவற்றிற்கும் ஒற்று மிகத் தோன்றுதல் கொள்க. முயிற்றை முயிற்றொடு முயிற்றுக்கு முயிற்றின் முயிற்றது முயிற்றுக்கண் என வரும். இன்னும் இதனானே யாட்டினை முயிற்றினை என விலக்கிய இன்பெறுதலுங் கொள்க. |
(25) |
198. | எண்ணி னிறுதி யன்னொடு சிவணும். |
|
இது குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுகின்றது. |