உயிர்மயங்கியல்215

236.

இனியணி யென்னுங் காலையு மிடனும்
வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன.

 

இஃது   எய்தாத   தெய்துவித்தது,     இவ்வீற்று    இடைச்சொற்கும்
வினைச்சொற்கும் முடிபு கூறுதலின்.
 

இதன் பொருள் இனி   அணி  என்னுங்   காலையும்   இடனும் -
இனியென்றும்     அணியென்றுஞ்    சொல்லப்படுகின்ற    காலத்தையும்
இடத்தையும்  உணரநின்ற  இடைச்சொல்லும்,  வினையெஞ்சு  கிளவியும் -
இவ்வீற்று வினையெச்சமாகிய சொல்லும், சுட்டும் -  இவ்வீற்றுச்  சுட்டாகிய
இடைச்சொல்லும்,  அன்ன - முற்கூறியவாறே  வல்லெழுத்து மிக்கு முடியும்
என்றவாறு.
 

உதாரணம் :இனிக்கொண்டான் அணிக்கொண்டான் தேடிக்கொண்டான்
சென்றான்  தந்தான் போயினான்  எனவும், இக்கொற்றன் சாத்தன்  தேவன்
பூதன் எனவும் வரும். இவ்விடைச்சொன் மூன்றும் இப்பொழுது கொண்டான்
அணிய  இடத்தே  கொண்டான்  இவ்விடத்துக்  கொற்றன்  என உருபின்
பொருள்பட வந்த வேற்றுமையாதலின் வேறோதி முடித்தார்.
 

(34)
 

237.

இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி
நின்ற விகர முகர மாத
றொன்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே.

 

இஃது  இவ்  வீற்று  வினையெச்சத்துள்  ஒன்றற்குச்  செய்யுண்  முடிபு
கூறுகின்றது.
 

இதன் பொருள் இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம்
உகரம் ஆதல் -  இன்றியென்று  சொல்லப்படும் வினையெச்சக்  குறிப்பின்
இறுதிக்கண்  நின்ற  இகரம்  உகரமாகத்   திரிந்து  முடிதல்,  தொன்றியல்
மருங்கிற்  செய்யுளுள் உரித்து  -  பழக நடந்த கூற்றையுடைய செய்யுளுள்
உரித்து என்றவாறு.
 

உதாரணம் :'உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே.'