242. | வளியென வரூஉம் பூதக் கிளவியு மவ்விய னிலையல் செவ்வி தென்ப. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் :வளியென வரூஉம் பூதக் கிளவியும் - வளியென்று சொல்ல வருகின்ற 1இடக்கரல்லாத ஐம்பெரும் பூதங்களில் ஒன்றை உணரநின்ற சொல்லும், அவ்வியல்நிலையல் செவ்வி தென்ப - முன்னைக் கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல்பின்கண் நிற்றல் செவ்விதென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் :வளியத்துக்கொண்டான் வளியிற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். |
செவ்விதென்றதனான் இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. |
(40) |
243. | உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. |
|
இது மரப்பெயரில் ஒன்றற்கு வல்லெழுத்துவிலக்கி மெல்லெழுத்து விதிக்கின்றது. |
இதன் பொருள் :உதிமரக் கிளவி - உதித்த லென்னுந் தொழிலன்றி உதியென்னும் மரத்தினை உணரநின்றசொல், மெல்லெழுத்து மிகும் - வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் : உதிங்கோடு செதிள் தோல் பூ என வரும். |
அம்முச்சாரியை விதிக்கின்ற புளிமரத்தினை 2இதன்பின் வைத்தமையான் உதியங்கோடு என இதற்கும் அம்முப்பெறுதல் கொள்க. இஃது இக்காலத்து ஒதியென மருவிற்று. |
(41) |
244. | புளிமரக் கிளவிக் கம்மே சாரியை. |
|
இது வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
|
1. இடக்கர் என்பது அபானவாயுவைக் குறித்தது. |
2. இதன்பின் என்றது வருஞ் சூத்திரத்தை. |