238உயிர்மயங்கியல்

280.

ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே.

 

இஃது ஐகார  ஈறு வேற்றுமைக்கண்  முடியுமாறு  கூறுகின்றது. தொகை
மரபினுள்  'வேற்றுமை யல்வழி இஐ யென்னும்' (எழு - 158) என்பதன்கண்
அல்வழி முடித்தார்.
 

இதன் பொருள் :ஐகார  இறுதிப்  பெயர்நிலை  முன்னர்   -  ஐகார
ஈற்றுப்  பெயர்ச்சொன்   முன்னர்  அதிகாரத்தாற்  கசதப    முதன்மொழி
வந்துழி,  வேற்றுமையாயின்   வல்லெழுத்து    மிகும்   -   வேற்றுமைப்
பொருட்  புணர்ச்சியாயின்   தமக்குப்  பொருந்தின  வல்லெழுத்து  மிக்கு
முடியும் என்றவாறு.
 

உதாரணம் :யானைக்கோடு செவி தலை புறம் என வரும்.
 

வேற்றுமையாயின் என்றதனான் உருபு  புணர்ச்சிக்கண்ணும் யானையைக்
கொணர்ந்தானென வல்லெழுத்து மிகுதல் கொள்க.
 

(78)
 

281.

சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும்.
 

இது  வல்லெழுத்தினோடு   வற்று   வகுத்தலின்   எய்தியதன்   மேற்
சிறப்புவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் :   சுட்டுமுதல்    இறுதி    -    சுட்டெழுத்தினை
முதலாகவுடைய   ஐகார  ஈற்றுப்பெயர்,   உருபியல்  நிலையும்  -  உருபு
புணர்ச்சியிற் கூறிய  இயல்புபோலப் பொருட் புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று
முடியும் என்றவாறு.
 

உதாரணம் :அவையற்றுக்கோடு இவையற்றுக்கோடு உவையற்றுக்கோடு
செவி தலை புறம் என வரும். இதனை 'வஃகான் மெய்கெட' (எழு  -  122)
என்பதனான் முடிக்க.
 

(79)
 

282.

விசைமரக் கிளவியு ஞெமையு நமையு
மாமுப் பெயருஞ் சேமர வியல.

 

இது  வல்லெழுத்து  விலக்கி   மெல்லெழுத்து  விதித்தலின்  எய்தியது
விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் :  விசைமரக்   கிளவியும்  -  விசைத்தற்றொழிலன்றி
விசையென்னும் மரத்தை உணரநின்ற சொல்லும்,