புள்ளிமயங்கியல்253

எல்லாமென்றதனால்  தொழிற்பெயரல்லனவும் உகரமும்  வல்லெழுத்தும்
பெற்றும்   இன்சாரியை  பெற்றும்   புணர்வன  கொள்க.  வெண்ணுக்கரை
'தாழ்பெயல்  கனைகுரல்   கடுப்பப்   பண்ணுப்பெயர்த்து'   எண்ணுப்பாறு
வெண்ணின்கரை என வரும்.
 

(11)
 

307.

கிளைப்பெய ரெல்லாங் கொளத்திரி பிலவே.
 

இஃது  இவற்றுட்  சிலவற்றிற்குத்   திரிபு  விலக்கி இயல்பு  கூறுதலின்,
எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் :கிளைப்பெய ரெல்லாம் - ணகார ஈற்றுள் ஓரினத்தை
உணரநின்ற   பெயரெல்லாம்,  கொளத்திரிபு  இல  -   திரிபுடையவென்று
கருதும்படியாகத் திரிதலின்றாய் இயல்பாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் உமண்  என நிறுத்திக் குடி சேரி தோட்டம் பாடி எனத்
தந்து முடிக்க.
 

இனி , எல்லாமென்றதனாற் பிற சாரியைபெற்று  முடிவனவும் இயல்பாய்
முடிவனவுங்   கொள்க.   1மண்ணப்பத்தம்   எண்ண   நொலை  எனவும்,
கவண்கால் பரண்கால் எனவும் கொள்க.
 

கொள   என்றதனால் ஏழாம்  வேற்றுமைப் பொருண்மை  உணரநின்ற
இடைச்சொற்கள்   திரிந்து  முடிவனவுங்   கொள்க.   அங்கட்கொண்டான்
இங்கட்கொண்டான்    உங்கட்கொண்டான்   எங்கட்கொண்டான் எனவும்,
ஆங்கட்கொண்டான்      ஈங்கட்    கொண்டான்    ஊங்கட்கொண்டான்
யாங்கட்கொண்டான்   எனவும்,   அவட்கொண்டான்   இவட்கொண்டான்
உவட்கொண்டான் எவட்கொண்டான் எனவும் ஒட்டுக.
 

(12)

1. மண்ணப்பத்தம் - மண்ணாலாகியபத்தம். பந்தம்  பத்தம் என்றாயிற்று.
பந்தம்   -    திரள். எண்ணாலாகியநொலை.   நொலை   -  அப்பவகை.
மண்ணப்பத்தம், எண்ணநொலை இவை அக்குப்பெற்றன.