308. | வேற்றுமை யல்வழி யெண்ணெ னுணவுப்பெயர் வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே. |
|
இஃது அவ் வீற்றுள் ஒன்று அல்வழியுள் வேற்றுமை முடிபுபோலத் திரிந்து முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் :வேற்றுமை அல்வழி - வேற்றுமையல்லாத இடத்து, எண்ணென் உணவுப்பெயர் - வரையறைப் பொருண்மை உணர்த்தாது எண்ணென்று சொல்லப்படும் உணவினை உணர்த்தும்பெயர், வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்து - வேற்றுமையது திரிந்து முடியும் இயல்பு நிற்றலும் உரித்து என்றவாறு. |
உதாரணம் :எட்கடிது சிறிது தீது பெரிது என வரும். உம்மையால் தொகைமரபினுள் 1'மொழிமுத லாகும்' (எழு - 147) என்றதனாற் கூறிய இயல்பு பெரும்பான்மையாயிற்று. |
அஃது எண்கடிது என வரும். |
(13) |
309. | முரணென் றொழிற்பெயர் முதலிய னிலையும். |
|
இஃது இவ் வீற்றுட் தொழிற்பெயருள் ஒன்றற்குத் தொழிற் பெயர்க்கு எய்திய உகரமும் வல்லெழுத்தும் விலக்கி இவ் வீற்று அல்வழி முடிபும் வேற்றுமை முடிபும் எய்துவித்தது. |
இதன் பொருள் :முரண்என் தொழிற்பெயர் - மாறுபாடு உணர்த்தும் முரணென்னுந் தொழிற்பெயர், முதலியல் நிலையும் - 2தொகைமரபிற் கூறிய அல்வழிக்கண் திரியாது முடிந்த இயல்பின்கண்ணும் ஈண்டு வேற்றுமைக்கண் திரிந்து முடிந்த இயல்பின்கண்ணும் நிலைபெற்று முடியும் என்றவாறு. |
|
1. 'மொழிமுதலாகும்' என்றது, தொகைமரபு 5 - ம் சூத்திரத்தை. |
2. தொகைமரபிற் கூறிய ................ இயல்பின்கண்ணுமென்றது தொகைமரபு 5 - ம் சூத்திரத்தின்கட் கூறிய இயல்பு முடிபை. ஈண்டு வேற்றுமைக்கட் டிரிந்து முடிந்த இயல்பின் என்றது, இப் புள்ளி மயங்கியல் 6 - ம் சூத்திரத்துக் கூறிய திரிபு முடிபையும் தொகைமரபு 6 - ம் சூத்திரத்துக் கூறிய இயல்பு முடிபையும். |