258 புள்ளிமயங்கியல்

இதன் பொருள் :அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும் - மகர ஈறு
அல்வழிக்க ணெல்லாம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும் என்றவாறு.
 

உதாரணம் :மரங்குறிது  சிறிது  தீது பெரிது என வரும். மரம் பெரிது
என்புழித் திரிபின்றென்பது 1ஆணைகூறலென்னும் உத்தி.
 

இனி   எல்லாமென்றதனால்  அல்வழிக்கண்  மகர   ஈறு பிறவாற்றான்
முடிவனவெல்லாம்  முடிக்க. வட்டத்தடுக்கு, சதுரப் பலகை,  ஆய்தப்புள்ளி,
வேழக்கரும்பு,   கலக்கொள்சுக்கு;   தோரைபயறு,   நீலக்கண்    என்னும்
பண்புப்பெயர்கள்,   மகரங்கெட்டு   வல்லெழுத்து     மிக்கு   முடிந்தன.
ஆய்தவுலக்கை  அகர முதல 2இவை  இயல்புகணத்துக்கண்  மகரங்கெட்டு
முடிந்தன. எல்லாருங்குறியர்   நாங்குறியேம்   இவை  உயர்திணைப்பெயர்
மகரந்    திரிந்து    மெல்லெழுத்தாய்    முடிந்தன.  கொல்லுங்கொற்றன்,
உண்ணுஞ்சாத்தன்,  கவள மாந்துமலைகெழுநாடன்,  பொருமாரன், தாவுபரி,
பறக்குநாரை,    ஓடுநாகம்,   ஆடுபோர்,    வருகாலம்,  கொல்லும்யானை
பாடும்பாணன் என இவை  மகரந் திரிந்துங் கெட்டும்  நிலைபெற்றும் வந்த
பெயரெச்சம்.
 

இன்னும்  இதனானே    இயல்புகணத்துக்கண்ணும்  மகரங்  கெடுதலுங்
கெடாமையுங்  கொள்க. மரஞான்றது  நீண்டது   மாண்டது  எனவும், மரம்
யாது வலிது அடைந்தது எனவும் வரும். இன்னும் இதனானே பவளவாயென
உவமத்தும் நில நீரென எண்ணிடத்துங் கேடு கொள்க.
 

(19)

1. ஆணைகூறலாவது,      இவ்வாசிரியனது     கருத்து   இதுவெனக்
கொள்ளவைத்தல்.  பகரத்திற்கு  இனம்   மகரமாதலிற்  றிரியாது  என்பது
கருத்து.
 

2. இவை   இயல்புகணத்துக்  கண்   மகரங்கெட்டு  முடிந்தன என்றது,
உலக்கை    என்பதில்    உகரமும்      முதல      என்பதில் மகரமும்
இயல்புக்கணமாதல்பற்றி.    மென்கணம்,    இடைக்கணம்,   உயிர்க்கணம்
என்னும்  இவைகள்   இயல்புகணங்கள்.  இயல்புகணமென்றது, ஈண்டு உகர
மகரங்களை.     கொல்லுங்கொற்றன்     உண்ணுஞ்சாத்தன்       மகரந்
திரிந்தன. கவளமாந்து     மலைகெழுநாடன் முதலியன      மகரங்கெட்டு
நின்றன. கொல்லும்யானை முதலியன மகரம் நிலைபெற்றன.