புள்ளிமயங்கியல்273

றுமைப் பொருட்டு - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு.
 

உதாரணம் : பொற்குடம் சாடி தூதை பானை எனவரும். 
 

(37)
 

333.
 

மன்னுஞ் சின்னு மானு மீனும்
பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியு
மன்ன வியல வென்மனார் புலவர்.

 

இஃது அவ்வீற்று அசைநிலை  இடைச்சொற்களும்  ஏழாம்  வேற்றுமை
இடப்பொருள் உணரநின்ற  இடைச்சொற்களும் வினையெச்சமும் முடியுமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள் : மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும்
வினையெஞ்சு  கிளவியும்  -  மன்னென்னுஞ்  சொல்லுஞ்  சின்னென்னுஞ்
சொல்லும் ஆனென்னுஞ் சொல்லும் ஈனென்னஞ் சொல்லும் பின்னென்னுஞ்
சொல்லும் முன்னென்னுஞ் சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும், அன்ன
இயல  என்மனார் புலவர் - முற்கூறிய  இயல்பினை  யுடையவாய்  னகரம்
றகரமாய் முடியுமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
 

உதாரணம் : 'அதுமற் கொண்கன்  றேரே' 'காப்பும் பூண்டிசிற்கடையும்
போகல்'    (அகம்-7)     எனவும்    ஆற்கொண்டான்   ஈற்கொண்டான்
பிற்கொண்டான் முற்கொண்டான் சென்றான்  தந்தான் போயினான் எனவும்,
வரிற்கொள்ளும் செல்லும் தரும் போம் எனவும் வரும்.
 

பெயராந்தன்மையாகிய  1ஆன்  ஈன் என்பனவற்றை  முற்கூறாததனான்
ஆன்கொண்டான் ஈன்கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க.
 

பின்  முன்  என்பன பெயரும்  உருபும் வினையெச்சமுமாய்  நிற்றலிற்
பெயர்   ஈண்டுக்  கூறினார்.  ஏனைய   உருபியலுள்ளும்   வினையெஞ்சு
கிளவி   யென்பதன்கண்ணும்  முடியும்.  2அப்பெயரை   முற்கூறாததனாற்
பின்கொண்டான் முன்கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க.
 

இயலவென்றதனான்   ஊனென்னுஞ்   சுட்டு  ஊன்   கொண்டானென
இயல்பாய் முடிதல் கொள்க.
 

(38) 

1. ஆன் - அவ்விடம். ஈன் - இவ்விடம். ஊன் - உவ்விடம்.
 

2. அப் பெயரை என்றது, பின் முன் என்பவற்றை.