28நூன்மரபு

இக்கூறிய இலக்கணங்கள் கருவியுஞ் செய்கையுமென இருவகைய.
 

அவற்றுட்  கருவி   புறப்புறக்  கருவியும்,  புறக் கருவியும், அகப்புறக்
கருவியும்,  அகக்கருவியு  மென நால்வகைத்து.  நூன் மரபும் பிறப்பியலும்
புறப்புறக் கருவி. மொழிமரபு புறக் கருவி. புணரியல் அகப்புறக்கருவி. 'எகர
ஒகரம் பெயர்க் கீறாகா' (எழு - 272) என்றாற்போல்வன அகக்கருவி.
 

இனிச்     செய்கையும்     புறப்புறச்செய்கையும்,    புறச்செய்கையும்,
அகப்புறச்செய்கையும்,   அகச்செய்கையுமென    நால்வகைத்து.   'எல்லா
மொழிக்கு   முயிர்வரு   வழியே'   (எழு - 140)   என்றாற்   போல்வன
புறப்புறச்செய்கை.  'லனவென   வரூஉம்   புள்ளி  முன்னர்'  (எழு - 149)
என்றாற்போல்வன   புறச்செய்கை.   'உகரமொடு   புணரும்  புள்ளியிறுதி'
(எழு - 163)  என்றாற்போல்வன  அகப்புறச்செய்கை. தொகை மரபு முதலிய
ஓத்தினுள் இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவனவெல்லாம்
அகச்செய்கை. இவ்விகற்பமெல்லாந் தொகையாக உணர்க.
 

இவ்வோத்     தென்னுதலிற்றோ     வெனின்,    அதுவும்    அதன்
பெயருரைப்பவே அடங்கும்.
 

இவ்வோத்தென்ன   பெயர்த்தோவெனின்  இத் தொல்காப்பியமென்னும்
நூற்கு    மரபாந்     துணைக்கு     வேண்டுவனவற்றைத்    தொகுத்து
உணர்த்தினமையின் நூன்மர பென்னும் பெயர்த்தாயிற்று.
 

நூலென்றது     நூல்போறலின்    ஒப்பினாயதோர்    ஆகுபெயராம்.
அவ்வொப்பாயவா   றென்னை   யெனின்,   குற்றங்   களைந்து  எஃகிய
பன்னுனைப் பஞ்சிகளையெல்லாங் கைவன்மகடூஉத்  தூய்மையும் நுண்மையு
முடையவாக  ஓரிழைப்   படுத்தினாற்  போல 'வினையி னீங்கி விளங்கிய
வறிவ'     (மரபியல்  -  94)     னாலே     வழுக்களைந்து    எஃகிய
இலக்கணங்களையெல்லாம்    முதலும்    முடிவும்   மாறுகோளின்றாகவுந்,
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையுங் காண்டிகையும்
உள்நின்று அகலவும், ஈரைங்குற்றமுமின்றி ஈரைந்தழகுபெற, முப்பத்திரண்டு
தந்திரவுத்தியோடு புணரவும்,