புள்ளிமயங்கியல்287

357.

யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே.

 

இது முறையானே யகர ஈற்றிற்கு வேற்றுமை முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : யகர  இறுதி  வேற்றுமைப்  பொருள்வயின் - யகர
ஈற்றுப்பெயர் வேற்றுமைப்பொருட்  புணர்ச்சிக்கண், வல்லெழுத்து மிகும் -
வல்லெழுத்து  முதன்மொழி  வந்து  இயையின்  அவ் வல்லெழுத்து மிக்கு
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : நாய்க்கால் செவி தலை புறம் என வரும். 
 

(62)
 

358.

தாயென் கிளவி யியற்கை யாகும்.
 

இது  விரவுப்பொருள்  ஒன்றற்கு   எய்திய   வல்லெழுத்து  விலக்கிப்
பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : தாயென்     கிளவி       இயற்கை     யாகும் -
தாயென்னுஞ்சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : தாய்கை செவி தலை புறம் என வரும்.
 

மேலைச்  சூத்திரத்தான்  மிகுதியுங்   கூறுதலின்  அஃறிணை  விரவுப்
பெயருள் அடங்காதாயிற்று. 
 

(63)
 

359.

மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே.
 

இஃது    எய்தாத   தெய்துவித்தது.    தாயென்பது   அடையடுத்துழி
வல்லெழுத்து மிகுக என்றலின்.
 

இதன் பொருள் : மகன்வினை கிளப்பின் - தாயென்னுஞ்சொல் தனக்கு
அடையாய் முன்வந்த மகனது வினையைப்  பின்னாக ஒருவன் கூறுமிடத்து,
முதல்நிலை   இயற்று  -  இவ்வீற்றுள்   முதற்கட்  கூறிய  நிலைமையின்
இயல்பிற்றாய்  வல்லெழுத்து  வந்துழி  அவ்  வல்லெழுத்து மிக்கு முடியும்
என்றவாறு.