இதன் பொருள்: எழுத்தெனப்படுப - எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகரமுதல் னகரவிறுவாய் முப்பஃதென்ப - அகரமுதல் னகரம்ஈறாகக்கிடந்த முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர், சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே -சார்ந்துவருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றும் அல்லாத இடத்து என்றவாறு. |
எனவே, அம்மூன்றுங் கூடியவழி முப்பத்துமூன்றென்ப. அ-ஆ-இ-ஈ-உ -ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஒள-க்-ங்-ச்-ஞ்-ட்-ண்-த்-ந்-ப்-ம் -ய்-ர்-ல்-வ்-ழ் -ள்-ற்-ன் எனவரும். எனப்படுவ வென்று சிறப்பித்துணர்த்துதலான் அளபெடையும் உயிர்மெய்யும் இத்துணைச் சிறப்பில; ஓசையுணர்வார்க்குக் கருவியாகிய வரிவடிவுஞ் சிறப்பிலா எழுத்தாகக் கொள்ளப்படும். |
அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றாரென்பது உணர்தற்கு னகரவிறுவா யென்றார். |
படுப, படுவ. படுபவென்பது படுத்தலோசையால் தொழிற் பெயராகக் கூறப்படும். பகரமும் வகரமும் ஈண்டு நிற்றற்குத் தம்முள் ஒத்தஉரிமையவேனும், எழுத்தெனப்படுவவெனத் தூக்கற்றுநிற்குஞ் சொற்சீரடிக்குப் படுபவென்பது இன்னோ சைத்தாய்நிற்றலின் ஈண்டுப் படுபவென்றே பாடம் ஓதுக. இஃது அன்பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். |
அகர னகரமெனவே பெயருங் கூறினார். |
எழுத்துக்கட்கெல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் 'மெய்யி னியக்க மகரமொடு சிவணும்' (எழு - 46) என்பதனாற் கூறுப. வீடுபேற்றிற்கு உரிய ஆண்மகனை உணர்த்துஞ் சிறப்பான் னகரம் பின்வைத்தார். இனி எழுத்துக்கட்குங் கிடக்கை முறையாயினவாறு கூறுதும். |
குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறி அவற்றிற்கு இனமொத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒருமாத்திரை கூறியே இரண்டுமாத்திரை கூறவேண்டுதலின். அன்றி இரண்டை முற்கூறினாலோவெனின், ஆகாது; ஒன்று நின்று அதனோடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவதன்றி |