397. | மெல்லெழுத் தியையின் ணகார மாகும். |
|
இது மேலதற்கு மென்கணத்துமுடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : மெல்லெழுத்து இயையின் ணகாரமாகும் - ளகார ஈறு மெல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின் ணகாரமாய்த் திரிந்துமுடியும் என்றவாறு. |
உதாரணம் : முண்ஞெரி நுனி மரம் என வரும். |
இதனை வேற்றுமையிறுதிக்கண் அல்வழியது எடுத்துந் கோடற்கட் சிங்கநோக்காக வைத்தலின் அல்வழிக்கும் இம் முடிபு கொள்க. முண்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். |
(102) |
398. | அல்வழி யெல்லா முறழென மொழிப. |
|
இது மேலதற்கு அல்வழிமுடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : அல்வழியெல்லாம் - ளகார ஈறு அல்வழிக்கணெல்லாம், உறழென மொழிப - திரியாதும் டகாரமாய்த் திரிந்தும் உறழ்ந்துமுடியுமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் : முள்கடிது முட்கடிது சிறிது தீது பெரிது என வரும். |
எல்லாமென்றதனாற் குணவேற்றுமைக்கண்ணும் இவ்வுறழ்ச்சி கொள்க. முள்குறுமை முட்குறுமை சிறுமை தீமை பெருமை எனவும், கோள்கடுமை கோட்கடுமை வாள்கடுமை வாட்கடுமை எனவும் ஒட்டுக. |
இதனானே அதோட்கொண்டான் இதோட்கொண்டான் உதோட்கொண்டான் எதோட்கொண்டான் சென்றான் தந்தான் போயினானென உருபு வாராது உருபின் பொருள்பட வந்தனவுங் கொள்க. |
(103) |
399. | ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலை யான. |
|
இது மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, தகரம் வருவழி உறழ்ச்சியேயன்றி ஆய்தமாகத் திரிந்து உறழ்க என்றலின். |