குற்றியலுகரப்புணரியல்313

1இதனை    ஏழென்று    கொள்வார்க்குப்     பிண்ணாக்கு   சுண்ணாம்பு
ஆமணக்கு முதலியன முடியாமை உணர்க. 
 

(1)
 

407.

அவற்றுள்
ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா.

 

இஃது அவ்வாறனுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : அவற்றுள்     -     அவ்வாறனுள்,    ஈரொற்றுத்
தொடர்மொழி  -   இரண்டொற்று   இடைக்கண்   தொடர்ந்து   நிற்குஞ்
சொல்லிற்கு  இடையின  ஒற்று  முதல்  நின்றால்,  இடைத்தொட  ராகா -
மேல்இடையினந் தொடர்ந்துநில்லா,  வல்லினமும் மெல்லினமும் தொடர்ந்து
நிற்கும் என்றவாறு.
 

உதாரணம் : ஆர்க்கு, ஈர்க்கு, நொய்ம்பு, மொய்ம்பு என வரும்.
 

(2)
 

408.

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணு
மெல்லா விறுதியு முகர நிலையும்.
2

1. இதனை  ஏழென்று  கொள்வது  அசைபற்றி. அசைகளாவன நேரசை
நான்கும் நிரையசை நான்கும். அவையாவன :-
 

1. அது  -  குறில்   தனியேவந்த   நேரசை.  2. கொக்கு  -   குறில்
ஒற்றோடு  வந்த  நேரசை.  3. காடு  -  நெடில்  தனியே  வந்த நேரசை.
4. பாட்டு  -  நெடில்  ஒற்றோடு  வந்த  நேரசை.  5. மரபு  - குறிலிணை
தனியே வந்த நிரையசை. 6. வரம்பு குறிலிணை ஒற்றோடு வந்த நிரையசை.
7. பலாசு - குறில் நெடில் இணைந்த நிரையசை. 8. கராம்பு - குறில் நெடில்
ஒற்றோடு  வந்த  நிரையசை  என்பனவாம்.  இவற்றுள்  குற்றெழுத்துக்குப்
பின்வந்த   உகரம்  முற்றிய   லுகரமாகலின்  அதனை   நீக்கி   ஏனைய
ஏழசைப்பின்னும்  வந்தன  குற்றிய  லுகரமாதல் காண்க. இதனை 'நெடிலே
குறிலிணை  குறினெடி  லென்றிவை -  ஒற்றொடு  வருதலொடு  குற்றொற்
றிறுதியென்-றேழ்குற் றுகரக் கிடனென மொழிப' என்னுஞ் சூத்திரத்தானறிக.

 

இங்ஙனம் ஏழசைபற்றிக்  குற்றியலுகரங்  கொள்வார்க்குப்  பிண்ணாக்கு,
சுண்ணாம்பு,  பட்டாங்கு  முதலியனவும்  வருவது  போவது முதலியனவும்
ஏழசையுளடங்காவாதலின்   அசைகொள்ளப்படாவென  மறுப்பர்  நன்னூல்
விருத்தியுரைகாரரும். [நன்னூல் - சூ. 94.]
 

2. நிறையும் எனவும் பாடம்.