இதன் பொருள் : ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் - ஒன்பது என நிறுத்திப் பஃது என வருவித்து முடிக்குங்கால், நிலைமொழியாகிய ஒன்பதென்னும் எண்ணினது ஒகரத்திற்கு முன்னாக ஒரு தகர ஒற்றுத்தோன்றி நிற்கும், முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் - முன் சொன்ன ஒகரத்திற்கு முன்னர் நின்ற னகர ஒற்று ணகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும், பஃதென் கிளவி ஆய்த பகரங்கெட - வருமொழியாகிய பஃதென்னுஞ் சொல் தன்கண் ஆய்தமும் பகரமுங் கெட்டுப்போக, ஊகாரக் கிளவி நிற்றல்வேண்டும் - நிலைமொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர் ஊகாரமாகிய எழுத்து வந்து நிற்றலை ஆசிரியன் விரும்பும், ஒற்றிய தகரம் றகரமாகும் - வருமொழியாகிய பத்தென்பதன் ஈற்றின்மேலேறிய உகரங் கெடாது பிரிந்துநிற்ப ஒற்றாய் நின்ற தகரம் றகர ஒற்றாய் நிற்கும் என்றவாறு. |