4. | ஆ ஈ ஊ, ஏ ஐ ஓ ஒள என்னு மப்பா லேழு மீரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஓ-ஒள என்னும் அப்பால் ஏழும் - ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஓ-ஒள என்று சொல்லப்படும் அக்கூற்றேழும், ஈரளவு இசைக்கும் நெட்டெழுத்து என்ப - ஒரோவொன்று இரண்டு மாத்திரையாக ஒலிக்கும் நெட்டெழுத்து என்னுங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர் ; என்றவாறு. |
எனவே, அளவுங் 1காரணக்குறியும் இங்ஙனம் உணர்த்தி மேல் ஆளுப. ஐகார ஒளகாரங்கள் குறிய எழுத்தின் நெடியவாதற்குக் குற்றெழுத்தாகிய இனந் தமக்கின்றேனும் மாத்திரை யொப்புமையான் நெட்டெழுத் தென்றார். |
'ஆ ஈ ஊ' 'ஏ ஐ' என்பனவற்றைச் சொற்சீரடியாக்குக. |
(4) |
5. | மூவள பிசைத்த லோரெழுத் தின்றே. |
|
இஃது ஐயம் அகற்றியது ; ஓரெழுத்து மூவளபாயும் இசைக்குங் கொல்லோவென்று ஐயப்படுதலின். |
இதன் பொருள் : ஓரெழுத்து மூவளபு இசைத்தலின்று - ஓரெழுத்தே நின்று மூன்று மாத்திரையாக இசைத்தலின்று ; என்றவாறு. |
எனவே, பல எழுத்துக் கூடிய இடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கு மென்றவாறு. |
எனவே, பெரும்பான்மை மூன்று மாத்திரையே பெறுமென்றார். பல எழுத்தெனவே, நான்கு மாத்திரையும் பெறுதல் பெற்றாம். |
(5) |
|
1. காரணக்குறி - காரணப்பெயர்: என்றது குற்றெழுத்து நெட்டெழுத்து என்னும் பெயரை. குறிய இசையை யுடையதாகிய எழுத்து; நெடிய இசையை யுடையதாகிய எழுத்து என்பது கருத்து. குற்றெழுத்து, நெட்டெழுத்து என்பன பண்புத்தொகை. மேலாளுப என்றது நெட்டெழுத்தென மேலும் எடுத்தாளுதலை. |