எழுத்தின் மாத்திரைக்கு அளவு, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே - நுண்ணிதாக நூலிலக்கணத்தை உணர்ந்த ஆசிரியர் கண்டநெறி என்றவாறு. |
1'என' எண்ணிற் பிரிந்து இரண்டிடத்துங் கூடிற்று. கண்ணிமை நொடி என்னும் பலபொருளொருசொற்கள் ஈண்டுத் தொழின்மேலும் ஓசைமேலும் முறையே நின்றன. ஆசிரியர் எல்லாரும் எழுத்திற்கு இவையே அளவாகக் கூறலின் இவருங் கூறினார். இயற்கைமகன் தன்குறிப்பினன்றி இரண்டிமையும் ஒருகாற்கூடி நீங்கின காலக்கழிவும் 'அ' எனப் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். இக் கண்ணிமையினது பாகம் மெய்க்குஞ் சார்பிற்றோற்றத்திற்கும் இதன் பாகம் மகரக் குறுக்கத்திற்குங் கொள்க. இக்கண்ணிமை இரட்டித்து வருதல் நெடிற்கும் அது மூன்றும் நான்குமாய் வருதல் அளபெடைக்குங் கொள்க. அதுபோலவே நொடித்தற்றொழிலிற் பிறந்த ஓசையது தோற்றக்கேட்டுக் காலக்கழிவும் அ எனப் பிறந்த ஓசையது தோற்றக்கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். ஏனையவற்றிற்குங் கூறியவாறே கொள்க. |
2இனி அவ்வளவைதான், நிறுத்தளத்தல் பெய்தளத்தல் சார்த்தியளத்தல் நீட்டியளத்தல் தெறித்தளத்தல் தேங்கமுகந்தளத்தல் எண்ணியளத்தல் என எழுவகைத்து. அவற்றுள் இது சார்த்தியளத்தலாம். |
|
1. என என்னும் இடைச்சொல் எண்ணுப் பொருட்கண் வருதலின் அது கண்ணிமையோடுங் கூட்டப்பட்டு கண்ணிமையென நொடியென நிற்குமென்பார் என எண்ணிற் பிரிந்து இரண்டிடத்துங் கூடிற்றென்றார். கண்ணிமை தொழின்மேலும் நொடி ஓசை மேலும் நின்றன என்க. இயற்கை மகன் என்றது இமைத்தற்றொழிலில் விகாரமில்லாத மகன் என்றபடி. குறிப்பு - நினைவு. பாகம் - சரிபங்கு. |
2. நிறுத்தளத்தல் - துலா முதலிய நிறையளவைகளால் நிறுத்தளத்தல். பெய்தளத்தல் - ஒன்றினுட் பெய்தளத்தல். என்றது கலமுதலியவற்றிற் பெய்தளத்தலை. சார்த்தியளத்தல் - ஒன்றனளவோடு மற்றொன்றனளவை ஒப்பிட்டு நோக்கியளத்தல். தெறித்தளத்தல் - ஒன்றனைப் புடைத்து ஒலியையுண்டாக்கி அதனைச் செவியாற் கேட்டு நிதானித்து அளந்துகோடல். அது மத்தளம் வீணை முதலியவற்றைப் புடைத்து அவற்றொலியைச் செவி கருவியாக அளந்து கோடல். தேங்கமுகந்தளத்தல் - நாழி முதலியவற்றானளத்தல். |