நூன்மரபு47

கண்ணிமைக்கும் நொடிக்கும் அளவு ஆராயின் வரம்பின்றி ஓடுமென்று
கருதி     'நுண்ணிதி    னுணர்ந்தோர்     கண்ட    வாறு'     என்று
முடிந்ததுகாட்டலென்னும்   உத்தி  கூறினார். இஃது ஆணை கூறுதலுமாம்.
எனவே,   எழுத்திற்கே  அளவு  கூறி  மாத்திரைக்கு  அளவு கூறிற்றிலர்.
நொடியிற்கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து 1நிகழாமையின்.
 

(7)
 

8.

ஒளகார விறுவாய்ப்,
பன்னீ ரெழுத்து முயிரென மொழிப.
 

இது குறிலையும் நெடிலையுந் தொகுத்து வேறோர் குறியீடு கூறுகின்றது.
 

இதன் பொருள்: ஒளகார   இறுவாய்ப்   பன்னீரெழுத்தும்  - அகரம்
முதலாக ஒளகாரம் ஈறாகக் கிடந்த பன்னிரண்டெழுத்தும், உயிரெனமொழிப
- உயிரென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

இதுவும்    ஆட்சியுங்   காரணமும்   நோக்கியதோர்   குறி.   மெய்
பதினெட்டினையும்    இயக்கித்   தான்   அருவாய்  வடிவின்றி நிற்றலின்
உயிராயிற்று.  இவை  மெய்க்கு  உயிராய்  நின்று  மெய்களை இயக்குமேல்
உயிரென வேறோர் எழுத்தின்றாம். பிறவெனின், மெய்யி  னிற்கும் உயிருந்
தனியே  நிற்கும்  உயிரும்  வேறென  உணர்க.  என்னை ? 'அகர முதல'
(குறள் - 1) என்புழி  அகரந் தனியுயிருமாய்க் ககரவொற்று முதலியவற்றிற்கு
உயிருமாய்   வேறு  நிற்றலின்.  அவ்வகரந்   தனியே  நிற்றலானும்  பல
மெய்க்கண்  நின்று  அவ்வம்  மெய்கட்கு  இசைந்த ஓசைகளைப் பயந்தே
நிற்றலானும்   வேறுபட்டதாகலின்  ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர்
தன்மையையுடைத்தென்று   கோடும்;   இறைவன்   ஒன்றேயாய்   நிற்குந்
தன்மையும்   பல்லுயிர்க்குந்   தானேயாய்   அவற்றின்  அளவாய் நிற்குந்
தன்மையும்போல.  அது அ  என்ற  வழியும் ஊர என விளியேற்றவழியும்
'அகரமுதல'     என்றவழியும்   மூவினங்களில்   ஏறினவழியும்    ஓசை
வேறுபட்டவாற்றான் உணர்க.


1. நிகழ்த்தாமையின் என்றிருப்பது நலம்.