இங்ஙனம் இசைத்துழியும் மாத்திரை ஒன்றேயாம். இஃது ஏனையுயிர்கட்கும் ஒக்கும். |
ஒளகாரவிறுவாய் என்பது பண்புத்தொகை . உம்மை முற்றும்மை. 1'அகரமுதல்' என முற்கூறிப் போந்தமையின் ஈண்டு ஈறே கூறினார். |
(8) |
9. | 2னகாரவிறுவாய்ப், பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப. |
|
இஃது உயிரல்லனவற்றைத் தொகுத்து ஓர் குறியீடு கூறுகின்றது. |
இதன் பொருள் : னகரவிறுவாய்ப் பதினெண் எழுத்தும் - ககாரம் முதல் னகாரம் ஈறாய்க் கிடந்த பதினெட்டு எழுத்தும், மெய்யென மொழிப - மெய்யென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு. |
இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. என்னை ? பன்னீருயிர்க்குந் தான் இடங்கொடுத்து அவற்றான் இயங்குந் தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின். |
னகாரவிறுவாய் என்பது பண்புத்தொகை. உம்மை முற்றும்மை. 3முன்னர் னகாரவிறுவாயென்புழி முப்பதெழுத்திற்கும் ஈறாமென்றார். ஈண்டுப் பதினெட்டெழுத்திற்கும் ஈறா மென்றாராதலிற் கூறியது கூறிற்றன்று. |
(9) |
|
1. 'அகரமுதல்' என முற்கூறிப் போந்தமையின் என்றது - முதற் சூத்திரத்தில் 'அகரமுதல்' எனக் கூறியமையை. எனவே ஆண்டுக் கூறிய அதனை ஈண்டுக் கூறிய 'ஒளகார விறுவாய்' என்பதனோடு சேர்த்து 'அகர முதல்' ஒளகார விறுவாய்ப் பன்னீ ரெழுத்து முயிரென மொழிப' எனக் கூறுக என்றபடி. |
2. இதன்கண் "ககரமுதல் னகரவிறுவாய்" எனக் கூறப்பட வில்லையேயெனின்? |
அது முதற் சூத்திரத்து முப்பது என்றதனாலும் இதன்கண் 'பதினெண்' எழுத்தும் என்றதனாலும் பின்வரும் "வல்லெழுத் தென்ப க ச ட த ப ற" என்னுஞ் சூத்திரம் முதலியவற்றானும் உய்த்துணர்ந்துகொள்ளப்படும். இச் சூத்திரமும் முதற்சூத்திரமும் நெடுங்கணக்கை அநுவதித்துக் கூறியனவாகும். |
3. முன்னர் என்றது 1-ம் சூத்திரத்தை. |