10. | மெய்யோ டியையினு முயிரிய றிரியா. |
|
இஃது உயிர்மெய்க்கு அளவு கூறுகின்றது. |
இதன் பொருள் : உயிர் மெய்யோடு இயையினும் - பன்னீருயிரும் பதினெட்டு மெய்யோடுங் கூடி நின்றனவாயினும், இயல்திரியா - தம் அளவுங் குறியும் எண்ணுந் திரிந்து நில்லா என்றவாறு. |
இது 'புள்ளியில்லா' (எழு-17) என்பதனை நோக்கி நிற்றலின் எதிரது போற்றலாம். உயிரும் மெய்யும் அதிகாரப்படுதலின் ஈண்டுவைத்தார். அ என்புழி நின்ற அளவுங் குறியும் ஒன்றென்னும் எண்ணுங் க என நின்ற இடத்தும் ஒக்கும் ; ஆ என்புழி நின்ற அளவுங் குறியும் ஒன்றென்னும் எண்ணுங் கா என நின்ற இடத்தும் ஒக்கும் என்பது இதன் கருத்து. பிறவும் அன்ன. ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னையெனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய் அரைநாழியுப்பிற் கலந்துழியுங் கூடி ஒன்றரைநாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட்பெற்றியென்று கொள்வதல்லது காரணங் கூறலாகாமை உணர்க. ஆசிரியன் ஆணை என்பாரும் உளர். |
1'விளங்காய் திரிட்டினா ரில்லைக் களங்கனியைக் காரெனச் செய்தாரு மில்' |
|
(நாலடியார் - 103) |
என்பதே காட்டினார் உரையாசிரியரும். |
(10) |
11. | மெய்யி னளவே யரையென மொழிப. |
|
இது தனிமெய்க்கு அளவு கூறுகின்றது. |
இதன் பொருள் : மெய்யின் அளவே அரையென மொழிப - மெய்யினது மாத்திரையினை ஒரோவொன்று அரைமாத்திரை யுடையவென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
|
1. விளங்காய்க்குத் திரட்சியும், களங்கனிக்குக் கருநிறமும் இயற்கையாதல்போல, உயிர்மெய்க் குறில்கள் ஒருமாத்திரை பெறுதலும், உயிர்மெய் நெடில்கள் இரண்டுமாத்திரை பெறுதலும் இயற்கையென்று கொள்வதல்லது அவற்றிற்குக் காரணங் கூறலாகாதென்றபடி. |