இதன் பொருள் : மெய்ந்நிலை சுட்டின் - பொருணிலைமையைக் கருதின், எல்லா எழுத்தும் - பதினெட்டு மெய்யும், தம்முன் தாம் வரூஉம் - தம்முன்னே தாம் வந்து மயங்கும், ர ழ அலங் கடையே - ரகார ழகாரங்களல்லாத இடத்து என்றவாறு. |
உதாரணம் : காக்கை எங்ஙனம் பச்சை மஞ்ஞை பட்டை மண்ணை தத்தை வெந்நெய் அப்பு அம்மை வெய்யர் எல்லி எவ்வி கள்ளி கொற்றி கன்னி என வரும். |
மெய்ந்நிலை சுட்டி னென்றதனால் தனிமெய் முன்னர் உயிர் மெய் வருமென்று கொள்க. எல்லாமென்றது ரகார ழகாரங்கள் ஒழிந்தனவற்றைத் தழுவிற்று. |
(30) |
31. | அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு. |
|
இது குற்றெழுத் தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது. |
இதன் பொருள் : அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு - அ இ உ என்று கூறிய அம்மூன்றுஞ் சுட்டென்னுங் குறியினையுடைய என்றவாறு. |
இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதோர் குறி, சுட்டி அறியப்படும் பொருளை உணர்த்தலின். தன்னின முடித்தல் என்பதனான் எகரம் வினாப்பொருள் உணர்த்தலுங் கொள்க. |
உதாரணம் : அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எப்பொருள் என வரும். இவை பெயரைச் சார்ந்து தத்தங் குறிப்பிற் பொருள்செய்த இடைச்சொல். இச்சூத்திரம் 1ஒரு தலைமொழித லென்னும் உத்தி. இதுவும் மேலைச் சூத்திரமும் எழுத்தாந்தன்மையன்றி மொழிநிலைமைப்பட்டு வேறோர் குறி பெற்று நிற்றலின் மொழிமரபினைச் சேரவைத்தார். |
(31) |
|
1. ஒருதலைமொழித லென்னு முத்தியாவது - ஓரதிகாரத்திற் சொல்லற்பாலதனை வேறோரதிகாரத்திற் சொல்லி அவ்விலக்கணமே ஆண்டும் பெறவைத்தல். சொல்லதிகாரத்திற் சொல்லற்பாலதாய சுட்டை எழுத்திற் கூறி அதனையே சொல்லிற்கும் பெறவைத்தல். |