இனிச் சிறப்புப்பாயிரத் திலக்கணஞ் செப்புமாறு : |
'பாயிரத் திலக்கணம் பகருங் காலை நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி யாசிரிய மானும் வெண்பா வானு மருவிய வகையா னுவறல் வேண்டும்.' |
|
இதனான் அறிக. |
நூல்செய்தான் பாயிரஞ் செய்தானாயிற் றன்னைப் புகழ்ந்தானாம். |
'தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந் தான்றற் புகழ்த றகுதி யன்றே.' |
|
என்பவாகலின். |
பாயிரஞ்செய்வார் தன்ஆசிரியருந் தன்னோடு ஒருங்கு கற்ற ஒருசாலைமாணக்கருந் தன் மாணாக்கருமென இவர். அவருள் இந் நூற்குப் பாயிரஞ் செய்தார் தமக்கு ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார். |
இதன் பொருள் : வடவேங்கடந் தென்குமரி ஆயிடை - வடக்கின்கண் வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமாகிய அவ்விரண் டெல்லைக்குள்ளிருந்து, தமிழ் கூறும் நல் உலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆ இரு முதலின் - தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது 1வழக்குஞ் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினாலே, செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு - அவர் கூறுஞ் செந்தமிழ் இயல்பாகப் பொருந்திய செந்தமிழ்நாட்டிற்கு இயைந்த வழக்கோடே முன்னையிலக்கணங்கள் இயைந்தபடியை முற்றக்கண்டு, முறைப்பட எண்ணி - அவ்விலக்கணங்களெல்லாஞ் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோர்க்கு அறியலாகாமையின் யான் இத்துணை வரையறுத்து உணர்த்துவலென்று அந்நூல்களிற் கிடந்தவாறன்றி அதிகார முறையான் முறைமைப்படச் செய்தலை எண்ணி, எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி - அவ்விலக்கணங்களுள் எழுத்தினையுஞ் சொல்லினையும் பொருளினையும் ஆராய்ந்து, போக்கு அறுபனுவல் - பத்துவகைக் குற்றமுந் தீர்ந்து முப்பத்திரண்டு வகை |
|
1.சிவஞானமுனிவர், 'வழக்கினையுஞ் செய்யுளினையும் ஆராய்ந்த பெரிய காரணத்தானே' என உரைகூறி 'நச்சினார்க்கினியார் முதலென்பதனைப் பெயரடியாற்பிறந்த முதனிலைவினைப் பெயராகக்கொண்டு முதலுதவினாலென உரைப்பர் ; இருமுதலென்னும் தொகைச்சொல் அங்ஙனம் பக்கிசைத்தல் பொருந்தாமை அறிக' எனத் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட் கூறியது காண்க. |