தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணுந் தனிமெய்க்கண்ணுங் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. 'அகரமுதல' என்னுங் குறளான், அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம்; அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென வள்ளுவனார் உவமைகூறிய வாற்றானுங், கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானேயெனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க. |
1.நச்சினார்க்கினியர் இச் சூத்திரத்திற்கு இது உயிர்மெய்க் கண் ஏறி உயிர்மெய்யாய் நின்றவிடத்து அம்மெய்யாற் பெயர்பெறுமாறு கூறுகிறதென்று கருத்துரைத்துப், பின் பன்னீருயிரும் மெய்யின் றன்மையிலே தம்முடைய தன்மை மயங்கிற்றாகப் பெயர்கூறிற் குற்றமில்லை என்று பதவுரையுங் கூறி, மெய்யின் தன்மையாவது, மெய்யோடு கூடிய உயிரும் வன்மை மென்மை இடைமை என்று பெயர்பெறுதலென்று விரிவுரையுங் கூறி, மூவினத்தாற் பெயர் பெறுமாற்றிற் குதாரணமுங் காட்டினர். ஆயின் இங்ஙனம் வலிந்து மாற்றிப் பொருள் கோடலாற் போந்த பயனின்மையின், உரையாசிரியர் கூறியவாறு இடைநிலை மயக்கப் புறனடையாகக்கொண்டு, தம் வடிவினியல்பைச் சொல்லுமிடத்து எல்லா மெய்யெழுத்தும் மெய்ம் மயக்கநிலையில் மயங்கல் குற்றமில்லையென்று கோடலே பொருத்தமாம், நன்னூலாரும் இவ்வாறே 'தம்பெயர் ...... இயலுமென்ப' எனக் கூறுதல் காண்க. அன்றியும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுவே என்றது, மெய்யெழுத்து முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்துநின்ற முறைபற்றியன்றி, உயிரையுங் கூட்டியன்று. ஆதலானும் நச்சினார்க்கினியர் கருத்துப் பொருந்தா தென்க. |