உத்தியொடு புணர்ந்த இந்நூலுள்ளே, மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டிப் புலந்தொகுத்தோனே - அம்மூவகையிலக்கணமும் மயங்கா முறைமையாற் செய்கின்றமையின் எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டிப் பின்னர் ஏனை யிலக்கணங்களையுந் தொகுத்துக் கூறினான், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து - மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின் கண்ணே, அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு அரில் தபத் தெரிந்து - அறமேகூறும் நாவினையுடைய நான்கு வேதத்தினையும் முற்ற அறிந்த அதங்கோடென்கிற ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமற ஆராய்ந்து கூறி, மல்குநீர்வரைப்பின் ஐந்திரம்நிறைந்த தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி - கடல் சூழ்ந்த உலகின்கண்ணே ஐந்திரவியாகரணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியினுள்ளோனெனத் தன்பெயரை மாயாமல் நிறுத்தி, பல்புகழ் நிறுத்த படிமை யோனே - பல புகழ்களையும் இவ்வுலகின் கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தையுடையோன் ; என்றவாறு. |