வருதலில்லை - வ என்று சொல்லப்படுந் தனிமெய் யெழுத்தோடு கூடி மொழிக்குமுதலாய் வருதலில்லை என்றவாறு. |
எனவே, ஒழிந்தன மொழிக்கு முதலாம் என்றவாறாயிற்று. |
உதாரணம் : வளை வாளி விளரி வீடு வெள்ளி வேட்கைவையம் வௌவுதல் என வரும். |
(30) |
64. | ஆ எ, ஒஎனு மூவுயிர் ஞகாரத் துரிய. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : ஆ எ ஒ எனும் மூவுயிர் - ஆ எ ஒ என்று கூறப்படும் மூன்று உயிரும், ஞகாரத்து உரிய - ஞகார ஒற்றொடுகூடி மொழிக்கு முதலாதற்கு உரிய என்றவாறு. |
எனவே, ஏனைய உரியவல்ல என்பதாம். |
உதாரணம் : ஞாலம் ஞெண்டு ஞொள்கிற்று எனவரும். |
'ஞமலிதந்தமனவுச்சூலுடும்பு' (பெரும்பாண் - 132) என்பது திசைச்சொல். ஞழியிற்று என்றாற்போல்வன இழி வழக்கு. |
(31) |
65. | ஆவோ டல்லது யகர முதலாது. |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: ஆவோடு அல்லது யகரம் முதலாது - ஆகாரத்தோடு கூடியல்லது யகரவொற்று மொழிக்கு முதலாகாது என்றவாறு. |
உதாரணம்: யானை யாடு யாமம் எனவரும். |
யவனர் யுத்தி யூபம் யோகம் யௌவனம் என்பன வடசொல்லென மறுக்க. |
(32) |
66. | முதலா வேன தம்பெயர் முதலும். |
|
இது மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமென்கின்றது. |
இதன் பொருள்: முதலாவும் - மொழிக்கு முதலாகா என்ற ஒன்பது மெய்யும், எனவும் - மொழிக்கு முதலா மென்ற ஒன்பது மெய்யும் பன்னிரண்டுயிரும், தம்பெயர் முதலும் - தத்தம் பெயர் கூறுதற்கு முதலாம் என்றவாறு. |