78. | ஞணநம னயரல வழள வென்னு மப்பதி னொன்றே புள்ளி யிறுதி. |
|
இது முன்னர் உயிர் ஈறாமாறு உணர்த்திப் புள்ளிகளுள் ஈறாவன இவையென்கின்றது. |
இதன் பொருள்: ஞணநமனயரலவழள என்னும் அப்பதினொன்றே புள்ளியிறுதி - ஞணநமனயரலவழள வென்று கூறப்பட்ட பதினொன்றுமே புள்ளிகளில் மொழிக்கு ஈறாவன என்றவாறு. |
உதாரணம் : உரிஞ் மண் பொருந் திரும் பொன் வேய் வேர் வேல் தெவ் வீழ் வேள் எனவரும். னகரம் ஈற்று வையாது மகரத்தோடு வைத்தது வழக்குப் பயிற்சியும் மயக்க இயைபும் நோக்கி. |
(45) |
79. | உச்ச காரமொடு நகாரஞ் சிவணும். |
|
இது மேற் பொதுவகையான் ஈறாவனவற்றுள் வரையறைப்படுவது இதுவென்கின்றது. |
இதன் பொருள்: உச்சகாரமொடு நகாரஞ் சிவணும் - உகாரத்தோடு கூடிய சகரம் இருமொழிக்கீறாயவாறுபோல நகரவொற்றும் இறுமொழிக்கல்லது ஈறாகாது என்றவாறு. |
உதாரணம் : பொருந் வெரிந் எனவரும். |
(46) |
80. | உப்ப காரமொடு ஞகாரையு மற்றே யப்பொரு ளிரட்டா திவணை யான. |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே - உகாரத்தோடு கூடிய பகரத்தோடு ஞகரமும் ஒத்து ஒருமொழிக்கு ஈறாம், இவணையான அப்பொருள் இரட்டாது - இவ்விடத்து ஞகாரத்தின் கண்ணான அப்பொருள் பகரம் போல இருபொருட்படாது என்றவாறு. |
உதாரணம் : உரிஞ் எனவரும். ஞகாரம் ஒருமொழிக்கு ஈறாதலின் நகரத்தின்பின் கூறினார். இவணை என்னும் ஐகாரம் அசை. |
(47) |