61.

கதந பமவெனு மாவைந் தெழுத்து
மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. 
 

இது   மேற்பொதுவகையான்   எய்துவித்த   இருநூற்றொரு   பத்தாறு
எழுத்துக்களைச் சிறப்புவகையான் வரையறுத்து எய்துவிக்கின்றது.
 

இதன் பொருள் : க த ந ப ம  எனும்  ஆவைந்தெழுத்தும் - க த ந
ப ம  என்று  கூறப்பட்ட  அவ்வைந்து  தனிமெய்யும், எல்லா உயிரொடுஞ்
செல்லுமார்  முதலே - பன்னிரண்டு  உயிரோடும்  மொழிக்கு முதலாதற்குச்
செல்லும் என்றவாறு.
 

உதாரணம் : கலை கார் கிளி கீரி குடி கூடு கெண்டை கேழல் கைதை
கொண்டல்  கோடை  கௌவை  எனவும், தந்தை தாய் தித்தி தீமை துணி
தூணி  தெற்றி  தேன் தையல் தொண்டை தோடு தௌவை எனவும், நந்து
நாரை நிலம்  நீலம் நுகம் நூல் நெய்தல் நேமி நைவளம் நொச்சி நோக்கம்
நௌவி  எனவும்,  படை பால் பிடி பீடு புகழ் பூமி பெடை பேடை பைதல்
பொன்  போது  பௌவம்  எனவும்,  மடி மாலை மிடறு மீளி முகம் மூப்பு
மெலிவு மேனி மையல் மொழி மோத்தை மௌவல் எனவும் வரும்.
 

(28)