புணர்நிலைக்கண் சில உருபுகட்காவதொரு விதி கூறுகின்றது.
பொருள்:வல்லெழுத்தை முதலாக உடைய வேற்றுமை உருபுகள் உருபு புணர்ச்சிக்குப் பொருந்தும்வழி அவ்ஒற்று இடையேமிகும். அவை; நான்கனுருபும் ஏழனுருபுமாம்.
எ-டு :மழைக்கு, மதிக்கு, அவர்க்கு, வாய்க்கு, பாழ்க்கு எனவும் நுனிக்கண், கடைக்கண், ஊர்க்கண், பேய்க்கண், யாழ்க்கண் எனவும் வரும். ஒல்லாதவழி ஏழனுருபு அரசர்கண், பார்ப்பார்கண் என மிகாதுவரும்.
உருபுகள் இடைச்சொற்களாதலின் அகத்தோத்தினுள் வைத்துப் புணர்ச்சி விதி கூறற்கு ஏலாமையான் ஈண்டு ஓதினர். சாரியைப் புணர்ச்சி வேறுபாடுகளை ஈண்டுக் கூறற்கும் அதுவே காரணமென்க. இந்நூற்பாவிற்கு உரையாசிரியன்மார் எடுத்துக் காட்டிய காட்டுக்களுள் பல இவ்விதிக்கு வேண்டாதவை. சில ஏலாதவையாம்.