சூ. 116 :

வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே

(14)
 
க-து:

ஆறன் உருபிற்காவதொருதன்மை கூறுகின்றது.
 

பொருள் :அதிகாரத்தான் நின்ற ஆறன் உருபு வேற்றுமையாக நிற்பது
அதன் வழியவாகப் பெயர்ச்சொற்கள் புணரும் நிலைமைக் கண்ணேயாம்.
 

என்றது; அதுவென்னும் சொல், சாத்தனதுகொண்டான் என வினையொடு
புணர்ந்து நின்ற வழியும் எமது, தமது எனப் பெயரொடு புணராமல் தனித்து
இறுதியாய் நின்றவழியும் உருபாகாது என்றவாறு. என்னை?  சாத்தன்  அது
கொண்டான்  என்னுமிடத்து  அது என்பது  சுட்டுப்பெயராயும்,  சாத்தனது
கொண்டான்  என  நிற்பின்    குறிப்பு  வினைப்பெயராயும்  எமது, தமது
என்னுமிடத்துக்   குறிப்புவினை     முற்றாயும்   நிற்றலின்    வேற்றுமை
யுருபாகாதென்க.
 

எனவே   சாத்தனது  வீடு, எனது பொருள் எனப் பெயரொடு புணர்ந்த
வழியே வேற்றுமையாம் என்பது புலப்படும்.
 

இந்நூற்பாவிற்கு    உரையாசிரியன்மார்   கண்ட  உரை இவ்இயலொடு
இயையாமையையும், கூறியது கூறல் என்னும் குற்றப்படுதலையும்    காண்க.
மற்றும்   இவ்    உருபிற்குரிய     இன்றியமையாத     இவ்விலக்கணம்
பெறப்படாதொழிவதையும் ஓர்ந்து கொள்க.