இனி, இவ்இரு நூற்பாக்களின் சிறப்புரைகளுள் உரையாளர் அருத்தாபத்தியானும், ‘இயற்கை’ என்ற மிகையானும் பல்கடல், பல்சேனை, பல்யானை, பல்வேள்வி, பன்மீன், பஃறுளி, பல்லறம் என வருவனவற்றை அடக்கிக் கூறியுள்ளனர். அதனாற் பல, சில என்பவையே அகரம் நீங்கிப் பல், சில் என நின்றன என்பது அவர்தம் கருத்தாகும். அக்கருத்து மொழியியலுக்கு மாறானதாகும். |
பல், சில் என்பவை லகர ஈற்று அளவைப் பெயர்களாகும். இதனைப் பன்மை, சின்மை என்னும் சொல்லாக்கத்தானறியலாம். அவ்அளவைப் பெயர்கள் முழுமை உணர்த்தும் அகர ஈற்றொடு கூடிப் பல்ல, சில்ல எனவும் பல, சில எனவும் அஃறிணைப்பன்மைப் பெயர்களாக வரும், எனவே, உரையாசிரியன்மார் ஈண்டுமிகையுள் அடக்கியவை எல்லாம் புள்ளி மயங்கியலுள் கூறப்பெறும் லகர ஈற்று விதிகளுள் அடங்குமென்க. இவ்வாறு எடுத்தோத்துக்களான் முடியும் பல சொற்களைக் காலச்சூழலானும் திரிபுணர்ச்சியானும் உரையாசிரியன்மார் மிகையில்லாத இடத்தும் மிகையைக் கற்பித்து அடக்கியுள்ளமை இரங்கத்தக்கதாகும். |