சூ. 260 : | எருவும் செருவும் அம்மொடு சிவணித் |
| திரிபிடன் உடைய தெரியுங் காலை |
| அம்மின் மகரம் செருவயிற் கெடுமே |
| தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை |
(58) |
க - து: | எரு, செரு என்னுஞ் சொற்களுக்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள்: எரு என்னும் சொல்லும் செருவென்னும் சொல்லும் ஆராயுமிடத்து அம்முச்சாரியையொடு பொருந்திப் பொதுவிதியினின்று வேறுபடுமிடனுடையன. ஆண்டு அம்முச் சாரியையினது மகரஒற்றுச் செரு வென்னும் சொல்லிடத்துக் கெடும்; கெட்டவிடத்து வல்லெழுத்து மிகுதலாகிய இயல்பிற்றாய்த் தம் ஒற்றுமிகும். |
எ. டு: எருவங்குழி, எருவஞ்சேறு, எருவந்தாது, எருவம்பூழி எனவும் செருவக்களம், சேனை, தானை, படை எனவும் வரும். |
‘திரிபிடனுடைய’ என்றதனான் திரியாது வருதலும் ஆம். அவ்விடத்து எருக்குழி, செருக்களம் எனப் பொதுவிதி பெறுமென்க. |
‘தெரியுங்காலை’ என்றதனான் இயல்புகணத்தும் சிறுபான்மை அம்முச்சாரியை பெறுதல் கொள்க. எ. டு: எருவஞாற்சி, செருவநீட்சி எனவரும். |
இனி, இம்மிகையான் எருங்குழி என மெலிமிகுதலும் கொள்க என்பார் உரையாசிரியர். ஆண்டுச் சாரியை அகரந்தொக்கது எனக் கோடலே தக்கதாம். ‘மிகூஉம்’ என உடம்பொடு புணர்த்துக் கூறினமையான் தரூஉம், படூஉம் என உகரநீட்சியும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர். அவை உகர ஈற்றுச் சொற்களன்மையின் ஈண்டைக்கேலாமையறிக. மற்று இவ்வாறு வருவன சீர் நிறைக்க வந்த செய்யுளிசை அளபெடை எனக் கோடலே முறை என்க. |