சூ. 377 :வெயிலென் கிளவி மழையியல் நிலையும்
(82)
 

க-து:

வெயில் என்னும் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் வெயில்   என்னும்  பெயர், மழை என்னும் சொற்கு ஓதிய
இயல்பிற்றாய் அத்தும் இன்னுமாகிய சாரியை பெற்றுப் புணரும்.
 

எ - டு: வெயிலத்துக் கொண்டான்; வெயிலிற் கொண்டான், சென்றான்,
தந்தான்,  போயினான்,  ஞான்றான்,   நின்றான்,    மீண்டான்,  வந்தான்
எனவரும்.
 

அத்துச்   சாரியையும்   இன்   சாரியையும்   ஒருங்கு   மாட்டேற்றிக்
கூறினமையான் ‘‘அத்தே வற்றே’’ என்னும் சூத்திரத்தாற் கூறிய நிலைமொழி
ஒற்றுக்கேடு   இதற்கு  எய்தாதாயிற்று.  ‘இருள்’   என்னும்   கிளவிக்கும்
இவ்விளக்கம் ஒக்கும்.