சூ. 289 :அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும்(13)
 

க - து :

அன்ன   என்பதற்கு    எய்தியதன்மேற்   சிறப்பு    மரபு
கூறுகின்றது.
 

பொருள் :வினையுவமத்திற்கு உரிய உவமச் சொல் எட்டனுள் அன்ன
என்பது   வினையுவமத்திற்கேயன்றிப்   பயன்,  மெய்,  உரு என்னும் பிற
வகைக்கும் உவமச்   சொல்லாதற்குப்   பொருந்தும்.   இது  சுட்டடியாகப்
பிறந்ததாகலின் பொதுத்தன்மை எய்தி நின்றது.
 

எ - டு :‘மாரி   யன்ன   வண்கைத்  தேர்வேளாய்’ (புறம்-153) எனப்
பயனுவமத்திற்கும்,  ‘இலங்கு  பிறையன்ன  விலங்குவால் வையேயிறு’ என
மெய் யுவமத்திற்கும் ‘செவ்வானன்ன மேனி’ என உருவுவமத்திற்கும் சிவணி
வந்தவாறு கண்டுகொள்க.