அஃதாவது, இல்வாழ்க்கையை மேற்கொண்ட தலைவனும் தலைவியும் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்னும் ஐம்புலத்தாறு ஓம்பி இயல்புடைய மூவர்க்கும் துணை புரிந்து நன்கலமாகிய அறிவார்ந்த மக்கட்பேறுற்று இன்பம் நிறைந்து ஏவலரும் காவலருமாகிய சுற்றத்தொடு அமர்ந்து இம்மை இன்பமாகிய காம நுகர்ச்சியான் நிரம்பி முடிவுறும். அவ் இல்லறத்தின் குறிக்கோள் மறுமைப் பேறாகிய வீடு பெறுதலாகலான் அதனைப்பெறுதற்கு ஆகும் சிறந்தசெயலை நிகழ்த்துதல் கழிந்த இல்லறத்தின் பயனாகும் என்றவாறு. |