சூ. 118 :தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே
(26)
 

க - து : 

மேல் செவிலிக்கு ஓதப்பெற்ற கிளவிகள் நற்றாய்க்கு
உரியவாமாறு கூறுகின்றது.
 

பொருள் : தலைவியை   உற்றுநோக்கி   அவளது  ஒழுகலாற்றினைச்
செவிலி உணர்ந்தாங்கு  நற்றாயும்   ஆராய்ந்து    மதியுடம்படுவாளாயின்
செவிலிக்கு ஓதப்பெற்ற கிளவிகள் உரியவாகக் கோடலை  நீக்கார் நூலோர்.
 

நற்றாய்   மனையறம்   பேணும்  கடப்பாட்டினளாதலின் செவிலிபோல
உற்றுநோக்கி யுணர்தல் அருமைத்தாகலின்

செவிலியொடு   மாட்டெறிந்து   கூறப்பட்ட   தென்க.   நற்றாய்  கூற்றுப்
பெரும்பான்மையும் கொண்டெடுத்துக் கூறும் மொழிகளாகவே வரும்.
 

எ - டு :

தெறுவ தம்ம நும்மகள் விருப்பே

உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்

பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க

நாடுஇடை விலங்கிய வைப்பின்

காடிறந் தனள்நம் காத லோளே

(ஐங்-313)
 

என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை

நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு

அழுங்கல் மூதூர் அலரெழச்

செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே

(ஐங்-372)
 

எனவரும். பிறவும் சான்றோர் செய்யுட்கண் கண்டுகொள்க.