சூ. 175 : | தாய்போற் கழறித் தழீஇக் கோடல் |
| ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப |
| கவவொடு மயங்கிய காலை யான |
(32) |
க - து : | இல்லறக் கிழமையளாகிய தலைவிக்குரியதோ ரியல்பு கூறுகின்றது. |
பொருள் :தன்னை முயங்குதலான் தலைவன் பெருமகிழ்வுறுங் காலத்து மேல் நின்று மெய்கூறும் தாயரைப்போலக் கழற்றுரை கூறி இன்புறத்தழுவிக்கோடல் ஆராய்தலையுடைய மனைக்கிழத்திக்கும் உரியதெனக் கூறுவர் புலவர். |
மனைக்கிழத்திக்கும் என்ற உம்மை, காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின் தாய்போற் கழறுதல் (கற்-10) காமக் கிழத்திக்கேயன்றி எனப் பொருள் தந்து நிற்றலின் இறந்ததுதழீஇய எச்ச உம்மை. |
தலைவனது கடமையும் தலைமைப்பாடும் அவனது அயன்மைக்கும் செயல்கட்கும் காரணமாதலை உணர்ந்தொழுகுதலின் "ஆய்மனைக் கிழத்தி" என்றார். |