பொருள் : ஒருவர்க்குத் தாயமுறையான் வந்து அடைந்தும், பிறர் ஈத்தளித்தலான் வந்துற்றும். தமது தொழில் முயற்சியான் வந்தமைந்தும், பிறரை வென்று கொள்ளப்பட்டும், இவை எம்முடைய பொருள் என்று கூறும் தகவினான் வரும் உரிமைத் தோற்றம் பற்றியவை அல்லவாயினும் அகப்பொருள் ஒழுகலாற்றின்கண் எம்முடையவை எனக் கூறற்குப் பொருந்துவனவாகிய பொருள்கள் உள. |
என்றது : தலைவன் தலைவியை என் உயிர் எனவும் உணர்வெனவும் கூறுதலும் தலைவி, செவிலி முதலானோர் ஒருவரையொருவர் அவ்வாறு கூறுதலும் தோழி, தலைவி, உறுப்பு, உணர்வு முதலியவற்றைத் தன்னுடையவாகக் கூறலும் அவை போல்வன பிறவற்றை அவ்வாறு கூறுதலுமாம். |
எ - டு : | என்றோள் எழுதிய தொய்யிலும் |
(கலி-18) |
எனத் தலைவி தோளினைத் தோழி என்தோள் என்றாள். |
| நின் கண்ணாற்கா ண்பென்மன்யான் |
(கலி-39) |
எனத் தோழியின் கண்களைத் தன் கண்ணாகக் கொண்டு காண்பென் எனத் தலைவி கூறியது. நெஞ்சம் என்னொடும் நின்னோடும் சூழாது . ...சென்றது. (அக-128) எனத்தன் நெஞ்சினைத் தோழிக்கும் உரியதாகத் தலைவி கூறியது. பிறவும் இவ்வாறு வருவனவெல்லாம் இதன்கண் அடங்கும். |