பொருள் :தெய்வம் அஞ்சல் முதலாக மறைந்தவை உரைத்தல் ஈறாயவை புறஞ்சொல் மாணாக்கிளவியொடு கூடிச் சிறந்த அப்பத்தும் மேற்கூறிய அழிவில் கூட்டத்திற்குரிய பொருளாகும். |
செவ்வொண்ணாக நிற்கும் தெய்வமஞ்சல் முதலிய ஒன்பதிற்கும் எண்ணும்மை விரித்துக் கொள்க. ஏகாரம் - இசைநிறை. |
தெய்வப் புணர்ச்சி முதலாக நிகழும் களவின் வழிவந்த வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்திற்கும், உள்ளப் புணர்ச்சியளவாளே தமரான் வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்திற்கும் இவை ஒப்ப உரியவாக அமைந்து வருதலின் ‘சிறந்தபத்து’ என விதந்தோதினார் என்க. |
இவைபத்தும் மன்னிய வினைக்கு நிமித்தமாகாமல் மன்னிய வினையின்கண் நிகழ்வனவாய்க் கற்பொழுக்கத்திற்குச் சிறந்துரிமை பெற்று வருதலான் மேலனவற்றொடு ஒருங்கோதாமல் பிரித்தோதப்பட்டன என்க. |
மாணாத புறஞ்சொற் கிளத்தல், குடிமை சான்ற தலைமக்கட்கு ஒவ்வாது, சிறுபான்மை நிகழும் என்பது தோன்றப் பிரித்துக்கூட்டப் பட்டதென்க. |
ஈண்டுக் கூறிய இப்பொருள் பத்தும் கற்பியலுள் தலைவற்குரியவாக ஓதப்பெற்ற முப்பத்து மூன்று கிளவிகள் பற்றியும் தலைவிக்குரியவாக ஓதப்பெற்ற பத்தொன்பது கிளவிகள் பற்றியும் வரும் பண்பும் செயலுமாகிய உணர்ச்சிகளுள் மெய்ப்பாடு தோன்றுதற்குரிய சிறப்புடைய பொருள்கள் என்றதனான் அத்துணைச் சிறவாமல் வரும் பொருள்களும் உள என்பதும் அவை சிறுபான்மைய என்பதும் கொள்ளப்படும். |
ஊடலும் கூடலுமாகிய காம ஒழுக்கத்துள் கற்பிற்கு ஊடல் சிறந்துரிமை பெற்று வருமாகலின் தெய்வமஞ்சல் முதலிய இப்பொருள்கள் ஊடலை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்பது உய்த்துணரப்படும். இவற்றுள் ஏற்பவை தலைவற்கும் உரியவாக வருமென்க. |
1. தெய்வமஞ்சலாவது : களவின் கண்ணும் வரைவின் கண்ணும் "பிரியேன் பிரியின் தரியேன்" எனச் சூளுரைத்த தலைவன் கற்பின்கண் பொதுவாக ஓதல் முதலியவற்றின் கண்ணும் சிறப்பாகப் பரத்தையின் கண்ணும் பிரிந்தவழி அச்சூளுரை காரணமாகத் தலைவற்கு ஊறுநேருங்கொல் எனக்கருதி முழுமுதற் பொருளல்லாத பூத தத்துவப் பொருளாகவும் கிளவி யாக்கத்துள் தெய்வஞ் சுட்டுவனவாகவும் கூறப்பெற்ற |
தெய்வங்களைத் தலைவி அஞ்சுதலாம். பரவுதல், வேண்டல் என்றாற் போலக் கூறாமல் அஞ்சுதல் எனக் கூறியமையான் தெய்வம் என்றது சிறுதெய்வங்கள் என்பது பெறப்படும். |
எ - டு : | "சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் |
| கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ" |
| "முளிமுதல் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென |
| வளிதரு செல்வனை வாழ்த்தவும்இ யைவதோ" |
(கலி-16) |
| "அச்சாறாக உணரிய வருபவன் |
| பொய்ச்சூளஞ்சிப் புலவே னாகுவல்" |
(கலி-75) |
என வரும். பிறவும் சான்றோர் செய்யுட்களுள் கண்டு கொள்க. இஃது அச்சமென்னும் மெய்ப்பாட்டிற்குப் பொருளாக அமையும். |
2. புரையறந் தெளிதலாவது : இல்லற வாழ்க்கை என்பது கொண்டானை உவப்பித்தலும் மக்கட்பேறெய்துதலுமாகிய இவையேயன்றி இயல்புடை மூவர்க்குத் துணைபுரிதலும் ஐம்புலத்தாறு ஓம்பலும் பிரிவிடையாற்றலும் பிறவும் உயர்ந்த அறமெனத் தெளிந்து ஒழுகுதலாம். |
எ - டு : | விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவும் |
| அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும் |
| ஆங்கவிந் தொழியுமென் புலவி தாங்காது |
| அவ்வவ் விடத்தான் அவையவை காணப் |
| பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும் |
| மாய மகிழ்நன் பரத்தைமை |
| நோவென் தோழி கடன்நமக் கெனவே |
(கலி-75) |
| ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி |
| அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் |
| கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் |
| கொடுத்த தந்தைக் கொழுஞ்சோ றுள்ளாள் |
| ஒழுகுநீர் நுணங்குறல் போலப் |
| பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே |
(நற்-110) |
எனவரும். இஃது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |
3. இல்லது காய்தலாவது : தன்வயின் உரிமையான் எழுங் காதல்மிகுதியான் மனையறக்கிழத்தி தலைவன் தவறு புரியா வழியும் அவன்பால் தவறு கற்பித்து ஊடல் கொண்டு சினத்தல். |
எ - டு : | "வைகை வருபுனலாடத் தவிர்ந்தேன்" என்ற |
| தலைவனை நோக்கி |
| ஓஒ புனலாடி னாய்எனவும் கேட்டேன் புனலாங்கே |
| நீள்நீர் நெறிகதுப்பு வாரும் அறலாக |
| மாண்எழில் உண்கண் பிறழும் கயலாகக் |
| கார்மலர் வேய்ந்த கமழ்பூம் பரப்பாகம் |
| நாணுச்சிறை யழித்து நன்பகல் வந்தவள் |
| யாணர்ப் புதுப்புனல் ஆடினாய் முன்மாலை |
| பாணன் புணையாகப் புக்கு |
(கலி-98) |
எனத் தலைவி கூறிச் சினத்தல் கண்டு கொள்க. |
| கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் |
| காட்டிய சூடினீர் என்று |
(குறள்-1313) |
என்பதுமது. இது வெகுளிக்குப் பொருளாக அமையும். |
4. உள்ளது உவர்த்தலாவது : தலைவன் தான் தண்ணளி செய்து உவப்பிங்குங்காலும் அவன்தன் பரத்தமையை எண்ணித் தலைவி அவன் செயலை மாயமென மயங்கி நீக்குதல். |
எ - டு : | ........... வினைக்கெட்டு |
| வாயல்லா வெண்மை உரையாது கூறுநின் |
| மாயம் மருள்வா ரகத்து (கலி-88) எனவும் |
| ...... ..... ....... இன்று வந்து |
| ஆக வனமுலை அரும்பிய சுணங்கின் |
| மாசில் கற்பின் புதல்வன் தாயென |
| மாயப் பொய்ம்மொழி சாயினைப் பயிற்றியெம் |
| முதுமை எள்ளல் அஃதமைகும் தில்ல" |
(அகம்-6) |
எனவும்வரும். இதுவும் வெகுளிக்குப் பொருளாக அமையும். |
5. புணர்ந்துழி உண்மைப் பொழுது மறுப்பாக்கமாவது : தலைவன் குறித்த பருவம் இகந்து மீண்டுவந்து கூடியவழிக் கூறிச்சென்ற பருவ மாறுபாட்டினைக் கருதாது அதனையே பருவமாகக் கொண்டு தலைவி மகிழ்தல். எ-டு : வந்துழிக் கண்டு கொள்க. இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
இதனைப் "புணர்ந்துழி உண்மை" எனவும் "பொழுது மறுப்பாக்கம்" எனவும் இரண்டாகப் பிரித்து உரை கூறுவர் உரையாசிரியரும் பேராசிரியரும். புணர்ந்துழியுண்மை என்பது மெய்ப்பாட்டிற்குரியதொரு பொருளாதற்குச் சிறவாமையானும், சொற்றொடர் அமைவு அங்ஙனம் பிரித்துக் கோடற்கு இயையாமையானும் அஃது ஆசிரியர் கருத்தாதற்கொவ்வு மாறில்லை என்க. |
6. அருள்மிக உடைமையாவது : தலைவனது புறத்தொழுக்கம் முதலியவை பற்றி முனியாது அவனது தலைமைப் பாட்டினைப் போற்றி ஒழுகல். |
எ - டு : | ............. எல்லா, புலப்பென்யான் |
| என்பேன் மன்அந் நிலையே அவற்காணின் |
| கலப்பென் என்னுமிக் கையறு நெஞ்சம் |
(கலி-67) |
எனவரும். இது தலைவன் மாட்டு அருள்மிக்கது. |
| "நாயுடைமுதுநீர்" என்னும் அகப்பாட்டினுள் |
| களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையா |
| நாணி நின்றோள் நிலைகண் டியானும் |
| பேணி னெனல்லனோ |
(அகம்-16) |
என்பது பரத்தைமாட்டு அருள்மிக்கது. பிறவும் இவ்வாறு வருவன கண்டு கொள்க. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். |
7. அன்புதொக நிற்றலாவது : புரையறந்தெளிந்த அறிவினளாயினும் புலவி, புணர்ச்சி உவகையைத் தோற்றுவித்தலின் தலைவன் மாட்டுச் செல்லும் தன் பேரன்பினைத் தலைவி அவற்குப் புலப்படாது மறைத்தல். தொகுதல் - மறைதல். |
எ - டு: | என்னைநீ செய்யினும் உரைத்தீ வாரில் வழி |
| முன்னடிப் பணிந்தெம்மை உணர்த்திய வருதிமன் |
| நிறைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ளக் |
| கரையிடைக் கிழிந்த நின் காழகம் |
| வந்துரையாக்கால் |
(கலி-73) |
எனவும். |
| அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி |
| மணிபுரை செவ்வாய், நின்மார்பகம் நனைப்பதால் |
| தோய்ந்தாரை அறிகுவேன் யான்எனக் கமழும்நின் |
| சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ |
(கலி-79) |
எனவும் வரும். இதுவும் உவகைக்குப் பொருளாக வரும். |
இதற்கு இல்லறத்தின்மேற் பெருகிய விருப்பினானே களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் ஒருங்குகூடி நிற்றல் என்பார் பேராசிரியர். அப்பொருள் மெய்ப்பாட்டுப் பொருளாதற்குச் சிறவாமையானும். இங்ஙனம் புலவியாற் கூறும் பொருள்பற்றி மெய்ப்பாடு தோன்றுதல் இன்றியமையாச் சிறப்பினது ஆகலானும், மேல் அருள்மிக உடைமை எனக் |
கூறிப் பின்னும் அன்பு மிக உடைமை எனல் ஒருவாற்றான் கூறியது கூறலாக அமையுமாகலானும் அஃது ஆசிரியர் கருத்தாகாமை தெரியலாம். |
8. பிரிவாற்றாமையாவது : தலைவன் தன் தலையாய கடமை பற்றிப் பிரிதலை ஆற்றியிருத்தல் முல்லை சான்ற கற்பொழுக்கத்திற்குச் சிறப்புடையதெனினும் தலைவி தன் கழிபெருங் காதல் காரணமாக ஆற்றாமை தோன்ற நிற்றல். |
எ - டு : | "நெஞ்சு நடுக்குறக் கேட்டும்" என்னும் |
| பாலைக் கலியுள் |
| "நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று |
| செய்பொருள் முற்றும் அளவென்றார் ஆயிழாய் |
| தாமிடை கொண்ட ததுவாயின் தம்மின்றி |
| யாமுயிர் வாழும் மதுகை இலேமாயின் |
| தொய்யில் துறந்தார் அவரெனத் தம்வயின் |
| நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு |
| போயின்று சொல்லென் உயிர் |
(கலி-24) |
எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
9. மறைந்தவை உரைத்தலாவது : சென்ற காலத்து நிகழ்ந்தவற்றை ஓர் ஏதுவைப்பற்றி எடுத்துப் பேசுதல். |
எ - டு : | மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி |
| முயங்கல் விடாஅல் இவையென மயங்கி |
| யான்நேரம் என்னவும் ஒல்லார் தாம்மற்று |
| இவைபாராட்டிய பருவமும் உளவே-இனியே |
| புதல்வற் றடுத்த பாலொடு தடைஇ |
| திதலை யணிந்த தேங்கொள் மென்முலை |
| நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம் |
| வீங்க முயங்கல் யாம்வேண் டினமே |
| தீம்பால் படுதல் தாமஞ் சினரே |
(அகம்-26) |
இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
10. புறஞ்சொல் மாணாக்கிளவியாவது : புறத்தார் கூறும் புன்சொல்லைப் பொறாது வெறுத்தலேயன்றித் தானும் புறஞ் சொல்லற்கு ஒவ்வாது நிற்றல். |
எ - டு : | இது மற்றெவனோ தோழி துனியிடை |
| இன்னர் என்னும் இன்னாக் கிளவி |
| ..... ...... ...... ....... ......... ....... ஊரன் |
| திருமனைப் பல்கடம் பூண்ட |
| பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே |
(குறு-181) |
என்பது தோழி புறங்கூறுதலைத் தலைவி பொறாத கிளவி. |
"மணிமருள் மலர" என்னும் அகப்பாட்டினுள் |
(அக-236) |
...... ..... ....... ........ ...... ‘ஊரன் |
காமம் பெருமை யறியேன் நன்றும் |
உய்ந்தனென் வாழி தோழி |
...... ....... ....... ....... ....... ஆதிமந்தி போல |
ஏதம் சொல்லிப் பேது பெரிதுறலே’ |
என்பது தலைவி தான் புறங்கூறலைப் பொறாத கிளவி. |
இது வெகுளிக்குப் பொருளாக அமையும். பெருமிதமாதற்கும் ஒக்கும். இவற்றுள் ஏற்பன தலைவற்கும் பொருளாக வரும். |
அளிநிலை பொறாஅது (அகம்-5) என்னும் அகப்பாட்டினுள் |
தூநீர்ப் பயந்த துணையமை பிணையல் |
மோயினள் உயிர்த்த காலை, மாமலர் |
மணியுரு விழந்த அணியழி தோற்றம் |
கண்டே கடிந்தனம் செலவே" |
என்பது தலைவன் புரையறந் தெளிதலாம். |
வங்காக் கடந்த செங்காற் பேடை |
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது |
குழலிசைக் குரல குறும்பல அகவும் |
குன்றுறு சிறுநெறி அரிய என்னாது |
மறப்பருங் காதலி ஒழிய |
இறப்பல் என்பதீண்டு இளமைக்கு முடிவே |
(குறு-151) |
என்பது தலைவன் பிரிவாற்றாமையாம். |
"உழுந்து தலைப்பெய்த" என்னும் (அகம்-86) அகப்பாட்டினுள் தலைவன் மறைந்தவை உரைத்தல் வந்தவாறு காண்க. |